இலங்கை எரிபொருள் விநியோகத்தில் நுழையும் சீன நிறுவனம்

Kanimoli
2 years ago
இலங்கை எரிபொருள் விநியோகத்தில் நுழையும் சீன நிறுவனம்

சீனாவின் முன்னணி எரிபொருள் நிறுவனமொன்று இலங்கையில் எரிபொருள் இறக்குமதி மற்றும் விநியோக நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சரால் அமைச்சரவைக்கு அறிவிக்கப்படவில்லை என அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

எனினும் மண்ணெண்ணெய், பெற்றோல் மற்றும் சமையல் எரிவாயு என்பவற்றை தடையின்றி விநியோகிப்பதற்காக இறக்குமதியாளர்கள் தமது சொந்த முயற்சியில் நாட்டுக்கு சுமையற்ற வகையில், அவற்றை இறக்குமதி செய்து விநியோகிப்பதற்கான செயற்திட்டமொன்றை உருவாக்குவதற்கான அனுமதி மாத்திரமே வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

சீனாவின் முன்னணி எரிபொருள் நிறுவனமான சினோபெக் நிறுவனம் இலங்கையின் சந்தையில் எரிபொருள் இறக்குமதி மற்றும் விநியோக நடவடிக்கைகளில் ஈடுபடுவதில் ஆர்வம் காண்பித்துவருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பில் அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கேட்கப்பட்ட போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சமகாலத்தில் நாட்டில் நிலவுகின்ற மோசமான அந்நிய செலாவணிப் பற்றாக்குறையால், தொடர்ச்சியாக பெற்றோலிய உற்பத்திப் பொருட்களின் விநியோகத்தை உறுதிப்படுத்துவதற்காக, பெற்றோலியப் பொருட்களின் இறக்குமதிக்காக மேலும் போட்டித்தன்மையான தரப்பினர்களுக்கு அனுமதிபத்திரங்களை வழங்குவதற்கு இயலுமாகும் வகையில் 2002 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க பெற்றோலிய உற்பத்திப் பொருட்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தைத் திருத்தம் செய்வதற்காக 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, சட்டவரைஞரால் குறித்த சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த சட்டமூலத்திற்காக சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைத்துள்ளது.

இதன்போது குறித்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்காகவும் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.