இன்றைய வேத வசனம் 13.08.2022:நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம்
எருசலேமைச் சேர்ந்த பக்தி வைராக்கியமுள்ள யூதன் நெகேமியா. எருசலேம் வீழ்ச்சியடைந்ததின் விளைவாக சிறைக்கைதியாக பாபிலோன் கொண்டு செல்லப்பட்டான்.
ஆனாலும் பரவாயில்லை, அங்கே அவனுக்கு நல்ல வேலை கிடைத்தது! பாபிலோன் அரண்மனையில் ஆடம்பரச் சூழ்நிலையில் அவனுக்கு எந்தக் குறையும் இல்லை.
ஆயினும் அவன் தனக்குள் சுகமாகயில்லை. அவனுடைய இருதயமோ தன்னுடைய தேவனுடைய நகரமாகிய எருசலேமைக் குறித்து சிந்தித்துக் கொண்டிருந்தது.
இடிந்து கிடக்கும் எருசலேமின் மதில்களைக் குறித்த நினைவுகள் அவனை முட்களாகக் குத்திக் கொண்டிருந்தன.
ஒரு நாள் அவனுடைய ஆர்வத்திற்கு அரசனின் அங்கீகாரம் கிடைத்தது. அவனுடைய கனவு நனவாகும் காலம் வந்தது.
பாபிலோனை விட்டு அவன் எருசலேமுக்குப் புறப்பட்டுச் சென்றான். தன்னுடைய நீண்ட விருப்பத்தை நிறைவேற்றினான். இடிந்து கிடந்த எருசலேமின் அலங்கத்தைச் சீரமைக்கும் பணியில் வெற்றி பெற்றான்.
ஆனாலும், அந்த வெற்றி என்பது எளிதாக வந்துவிடவில்லை. செயல்பட துவங்கியதும் தடைகள் பல வந்தன. எதிர்ப்புகள் ஏற்பட்டன. தொந்தரவுகள் வந்தன.
மனதைச் சோர்ந்து போகச் செய்யும் பரிகாச வார்த்தைகளையும், நிந்தையான சொற்களையும் கேட்க நேரிட்டது.
எருசலேமின் இடிந்துபோன மதில்சுவர்களைக் கட்டு வதற்கான வாய்ப்புகள் இல்லை என்று முடிவெடுக்கதக்கதான பல சோதனைகள் வந்தன.
ஆனாலும் நெகேமியா பின்வாங்கவில்லை. தொடங்கிய பணியை தொடராமல் விடவில்லை. எப்படியும் செய்து முடிப்பேன் என்ற அழுத்தமான முடிவுடன் அவன் செயல்பட்டான்.
சூழ்நிலைகள் மிகச் சிக்கலாயிருந்தபோதிலும், போராடி வெற்றிக்கொள்ள அவன் ஆயத்தமாயிருந்தான்.
தேவன் தனக்குத் துணை நின்று எப்படியும் வெற்றி பெறச் செய்வார் என்ற விசுவாசம் அவனிடம் உயிரோட்டமுள்ளதாய் இருந்தது. அவனுடைய நம்பிக்கை வீண்போகவில்லை. இறுதியில் அவன் வெற்றி பெற்றான்.
பலவந்தம் பண்ணுகிறவர்கள்தான் பரலோகராஜ்யத்தை அடைய முடியும் என்று இயேசு சொன்னார். (மத்தேயு 11:12)
ஆம், உயர்ந்த நோக்கங்களுக்காக நாம் ஆவிக்குரிய போராட்டம் போராடித்தான் ஆகவேண்டும். ஆவிக்குரிய வாழ்க்கையில் வெற்றிகளை நாம் சுமுகமாக பெற்றுவிட முடியாது.
ஆர்வத்தோடும், தாகத்தோடும், பின்னோக்க விரும்பாத உள்ளத்தோடும் தொடர்ந்து போராடினால்தான் அவைகளைப் பெற முடியும்.
தடைகளைக் கண்டு நின்றுவிடுவதல்ல. அவைகளைக் கடக்க பிரயாசைப்படுவதே ஆவிக்குரிய வாழ்க்கை.
எதிர்ப்புகளைக் கண்டு எதுவும் செய்யாமல் போய்விடுவதல்ல. அவைகளை மேற்கொள்ளப் போராடுவதே பரிசுத்த வாழ்க்கை.
சந்திக்கத் தயங்காமல் முன்னோக்கிச் செல்ல ஆர்வப்படுவதே ஆண்டவர் விரும்பும் அனுபவம்.
எனவேதான் பவுல் அப்போஸ்தலன் இயேசு கிறிஸ்துவுக்கு நல்ல போர்ச்சேவகனாயிருந்து, விசுவாசத்தின் நல்ல போராட்டத்தைப் போராடு என்று தீமோத்தேயுவுக்கு எழுதினான். ( தீமோத்தேயு 2:3, #I_தீமோத்தேயு 6:12)
போராட நாம் முன்வரும்போது போராடத் தேவையான பலத்தை தேவன் அருளுவார். நற்குணங்களோடு வாழ்வது ஒரு போராட்டம் தான். நற்செயல்களில் தொடர்வது ஒரு போராட்டம் தான்.
ஆனால் அவ்விதமான போராட்டங்களில் நாம் வெற்றி பெறுவதற்காகவே தேவனால் அழைக்கப்பட்டிருக்கின்றோம்.
யோசேப்பு பரிசுத்தத்திற்காக ஒரு போராட்டத்தைப் போராடினான் வெற்றியும் பெற்றான்.
தானியேல் அன்னிய தேசக் கலாச்சாரங்களால் தன்னை கறைபடுத்தாமலிருக்க ஒரு போராட்டத்தை போராடினான் அவனும் வெற்றி பெற்றான்.
இடிந்துபோன மதில்களை மீண்டும் கட்டியெழுப்பி, ஆவிக்குரிய எழுச்சியை ஏற்படுத்த நெகேமியா ஒரு போராட்டத்தைப் போராடினான் வெற்றி பெற்றான்.
இவர்களையெல்லாம் வெற்றியின் பாதையில் அழைத்துச் சென்று சாதனை புரியவைத்த தேவன் நம்மையும் அதற்காகவே அழைக்கின்றார்.
அவருடைய அழைப்பிற்கு நாம் அடிபணிந்தால் நாமும் வெற்றி வீரர்களாக விளங்கப் போவது நிச்சயம். ஆமென்!
உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன் என்றார். (யோவான் 16:33)
தேவனால் பிறப்பதெல்லாம் உலகத்தை ஜெயிக்கும்; நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம். (யோவான் 5:4)