ஞான அக்காவின் வீடு மற்றும் விகாரைக்கு இராணுவப் பாதுகாப்பு
அனுராதபுரம் ஞான அக்காவின் வீடு மற்றும் விகாரைக்கு இராணுவப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுடன் அண்மையில் எரிந்து நாசமான அவரது வீட்டை புனரமைக்கும் பணியிலும் இராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டு வருவதாக இரகசிய தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அனுராதபுரத்தில் ஏரிக்கரைக்கு அருகில் அமைந்துள்ள ஞான அக்காவின் வீடும் கடந்த மே மாதம் 9ஆம் திகதி சில குழுவினரால் தீக்கிரையாக்கப்பட்டது. அவரது விகாரை மற்றும் ஹோட்டலும் தாக்கப்பட்டு கடுமையாக சேதப்படுத்தப்பட்டன.
பல இராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் சக்திவாய்ந்த அரசியல்வாதிகள் அவரிடம் இருந்து சோதிட ஆலோசனைகளையும் பல்வேறு பாதுகாப்புகளையும் தொடர்ந்து தொடர்ந்து பெற்று வருகிறார்கள்.
அவரது விகாரை, வீடு, ஹோட்டல் ஆகியவற்றுக்கு மே மாதம் 9ஆம் திகதி முதல் இராணுவ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
அவரது வீட்டிற்கு இராணுவ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ள போதிலும், வீட்டை புனரமைக்கும் பணியை இராணுவம் மேற்கொள்ளவில்லை என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரொஹான் பிரேமரத்ன தெரிவித்துள்ளார்.
அனுராதபுரம் மாவட்டத்தில் தீ வைக்க முயற்சிகள் நடைபெற்ற இடங்கள் அனைத்திலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்களான ஷெஹான் சேமசிங்க, எஸ்.எம்.சந்திரசேன, சன்ன ஜயசுமனவின் வீடு மற்றும் மேயரின் வீட்டிற்கு தொடர்ந்து இராணுவ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
எனினும் அவர்களின் வீட்டை நிர்மாணிப்பதற்காக இராணுவம் களமிறக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்தி பொய்யான செய்தி என இராணுவ ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.