அரச ஊழியர்களை வாரத்தில் 5 நாட்களும் பணிக்கு அழைக்க அரசாங்கம் திட்டம்
அரச ஊழியர்களை வாரத்தில் 5 நாட்களும் பணிக்கு அழைப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது.
எரிபொருள் தட்டுப்பாட்டால் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையைக் கருத்தில் கொண்டு, அரச ஊழியர்களை பணிக்கு அழைப்பது கட்டுப்படுத்தப்பட்டது.
எவ்வாறாயினும், நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி ஓரளவுக்கு தணிக்கப்பட்டு, பொது சேவைகள் இயங்கி வருவதால், வாரத்தின் ஒவ்வொரு வேலை நாட்களிலும் சேவைகளை பெற்றுக் கொள்வதற்காக பொதுமக்கள் வழமை போன்று அரச அலுவலகங்களுக்கு வந்து செல்வதை அவதானிக்க முடிகிறது.
இதன்படி, அரச அலுவலகங்களின் பணிகளை வழமை போன்று நடத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதால், காலதாமதத்தை குறைக்கும் வகையில், அரசாங்க ஊழியர்களை வாரத்தில் ஐந்து நாட்களும் பணிக்கு அழைப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடியை கருத்தில் கொண்டு கடந்த ஜூலை 24ஆம் திகதி முதல் ஒரு மாத காலத்திற்கு அரச ஊழியர்களை பணிக்கு அழைப்பதை கட்டுப்படுத்தி சுற்றறிக்கை வெளியிடப்பட்டது.
இதன்படி, குறித்த கால அவகாசம் முடிவடைந்ததன் பின்னர், நாட்டின் நிலைமையை கருத்திற் கொண்டு வாரத்தின் ஐந்து நாட்களிலும் அரச ஊழியர்களை பணிக்கு அழைப்பது தொடர்பில் தீர்மானிக்கப்படவுள்ளது.
எவ்வாறாயினும், மாவட்ட மற்றும் பிரதேச செயலக மட்டத்திலான கடமை தேவைகளை கருத்தில் கொண்டு வாரத்தின் ஐந்து நாட்களும் பணிபுரிய உத்தியோகத்தர்களை அழைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட செயலாளர்களுக்கு ஏற்கனவே பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.