அனுமதியின்றி கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளும் கஜேந்திரகுமார் இடைநிறுத்த உத்தரவிட்ட மணிவண்ணன்

Kanimoli
2 years ago
அனுமதியின்றி கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளும் கஜேந்திரகுமார் இடைநிறுத்த உத்தரவிட்ட மணிவண்ணன்

சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தனது சொந்த தேவைக்காக மேற்கொள்ளும் கட்டுமானப் பணிகளை உடனடியாக நிறுத்துமாறு யாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் முறைப்படியான அனுமதி பெற்று கட்டுமானத்தை தொடரும்படி அறிவியுங்கள் எனவும் உரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், 

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் வீட்டு மதில் அனுமதியின்றி கட்டப்படுவதால், கட்டுமான பணியை உடனடியாக நிறுத்த யாழ் மாநகரசபை தீர்மானித்துள்ளது

யாழ்ப்பாணம் நல்லூர் குறுக்கு வீதியில், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் புதிதாக வீடொன்றை நிர்மணித்துள்ளார். தற்போது அந்த வீட்டு மதில் கட்டும் பணி  நடைபெற்று வருகிறது.

எனினும், இதற்கான அனுமதி யாழ் மாநகர சபையில் பெறப்படவில்லையெனவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் யாழ் மாநகரசபை அமர்வு நேற்றைய தினம் இடம்பெற்றது. இதன் போது, தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாநகரசபை உறுப்பினர் ப.தர்சானந்த், இந்த மதில் விவகாரம் தொடர்பில் கேள்வியெழுப்பியுள்ளார்.

அதன் போது, 'உங்கள் கட்சியின் தலைவர் என்பதால் அவர் அனுமதியின்றி மதில் கட்டுவதை அனுமதித்துள்ளீர்களா?' என யாழ் மாநகரசபை முதல்வர் வி.மணிவண்ணனை பார்த்து கேள்வியெழுப்பினார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில், அனுமதியற்ற கட்டுமானங்களை அனுமதிக்க முடியாது. அதனால் அந்த கட்டுமான பணிகளை உடனடியாக இடைநிறுத்துவதுடன், முறைப்படியான அனுமதி பெற்று கட்டுமானத்தை தொடரும்படி அறிவியுங்கள்’ என மாநகரசபை உத்தியோகத்தர்களிற்கு முதல்வர் உத்தரவிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.