ரஞ்சன் ராமநாயக்க ஜனாதிபதியின் பொது மன்னிப்பு தொடர்பான ஆவணத்தில் கையொப்பமிட்டுள்ளார்
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க ஜனாதிபதியின் பொது மன்னிப்பு தொடர்பான ஆவணத்தில் கையொப்பமிட்டுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசனைக்கு அமைய இந்த ஆவணத்தில் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி தினேஷ் விதானபத்திரன இன்று (13) உறுதிப்படுத்தியுள்ளார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் சகோதரர்களில் ஒருவரான தினேஷ் அசரப்பா குறித்த விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.
இதன்போது,“ஜனாதிபதியின் பொது மன்னிப்பு தொடர்பான இரண்டு ஆவணங்களில் இன்று கையொப்பமிட்டப்பட்டுள்ளது.
இதற்கமைய, சிறையில் இருந்தபோது ரஞ்சன் ராமநாயக்க நடந்துகொண்டது தொடர்பான ஆவணமும், நீதித்துறை தொடர்பாக அவர் அளித்த அறிக்கையும் கையொப்பமிட்டப்பட்டுள்ளது.
இந்த அறிக்கைகள் மூலம் நீதித்துறை, சகோதரத்துவ உறுப்பினர்களின் நற்பெயருக்கு எந்தவிதமான சேதத்தையும் ஏற்படுத்தும் நோக்கில் அவர் செயற்படவில்லை எனவும் அவ்வாறு செயற்பட்டிருந்தால் அதற்கு மன்னிப்பு கோருவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் ஆவணங்கள் பரிசீலிக்கப்பட்டு அடுத்த சில நாட்களில் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்படும் என்று நம்புகிறோம்.”என கூறியுள்ளார்.
ரஞ்சன் ராமநாயக்க தற்போது நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.