சர்வ கட்சி அரசாங்கத்தை உருவாக்குவதற்கு முன்னாள் அமைச்சர் பசில் பாரிய தடைகளை ஏற்படுத்தியுள்ளார் - திஸ்ஸ விதாரண

Kanimoli
2 years ago
சர்வ கட்சி அரசாங்கத்தை உருவாக்குவதற்கு முன்னாள் அமைச்சர் பசில் பாரிய தடைகளை ஏற்படுத்தியுள்ளார் - திஸ்ஸ விதாரண

சர்வ கட்சி அரசாங்கத்தை உருவாக்குவதற்கு முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச பாரிய தடைகளை ஏற்படுத்தியுள்ளார் என லங்கா சமசமாஜ கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.

அதிபர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் மக்களால் புறக்கணிக்கப்பட்ட பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தை முன்னெடுப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுகிறது எனவும் பதவியை தக்கவைத்துக்கொள்ள ரணிலும் பொதுஜன பெரமுனவிற்கு ஏற்றாற்போல் செயற்படுகிறார் என குற்றம் சுமத்தினார்.

மேலும், நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் சகல அரசியல் கட்சிகளையும் ஒன்றினைத்து பொது கொள்கைக்கமைய வரையறுக்கப்பட்ட கால அடிப்படையில் சர்வ கட்சி அரசாங்கம் உருவாக்கப்பட வேண்டும் என்பதை அதிபரிடம் வலியுறுத்தினோம்.

இருப்பினும் சர்வ கட்சி அரசாங்கத்தின் வியூகம் மற்றும் அதன் செயற்பாடு தொடர்பில் அதிபர் இதுவரை வெளிப்படை தன்மையுடன் பேச்சுவார்த்தையினை முன்னெடுக்கவில்லை எனவும் சுட்டிக்காட்டினார்

சர்வ கட்சி அரசாங்கத்தை உருவாக்குவதற்கு முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச பாரிய தடைகளை ஏற்படுத்தியுள்ளார். சர்வ கட்சி அரசாங்கத்தை ஸ்தாபிக்காமல் மக்களால் புறக்கணிக்கப்பட்ட பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தை முன்னெடுத்து செல்லும் அரசியல் சூழ்ச்சியினை பசில் ராஜபக்ச முன்னெடுத்துள்ளார் எனவும் தெரிவித்தார்.

நாடாளுமன்றில் இடம்பெற்ற அதிபர் தெரிவிற்கான வாக்கெடுப்பின் போது பலருக்கு வரபிரசாதங்கள் வழங்கப்பட்டுள்ளதுடன், பலர் அச்சுறுத்தப்பட்டுள்ளமை தற்போது வெளிப்பட்டுள்ளது.

ரணில் விக்ரமசிங்க தனது பதவியை தக்கவைத்துக்கொள்வதற்காக பொதுஜன பெரமுனவின் தேவைக்கமைய செயற்படுகிறார்.

சர்வ சர்வ கட்சி அரசாங்கத்தில் பொதுஜன பெரமுன பிரதான பங்குதாரராக செயற்படும் என பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் குறிப்பிட்டுள்ளமை அவதானத்திற்குரியது.

மக்களால் கடுமையாக வெறுக்கப்படும் தரப்பினர்களுக்கு அமைச்சு பதவிகளை வழங்க வேண்டும் என பொதுஜன பெரமுன வலியுறுத்தியுள்ளமை அரசியல் கட்டமைப்பு தொடர்பில் மக்கள் கொண்டுள்ள வெறுப்பை தீவிரப்படுத்தும் எனவும் தெரிவித்தார்.

அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் போராட்டம் நிறைவடைந்துள்ளது ஆகவே தனது விருப்பப்படி செயற்படலாம் என அரச தலைவர்கள் கருதுவது தவறானது. சர்வக்கட்சி அரசாங்கத்தை நிறுவி பிரச்சினைகளுக்கு தீர்வு காண மக்கள் அரசாங்கத்திற்கு காலவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

சர்வ கட்சி அரசாங்கத்தை அமைக்காமல் பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கம் தோற்றம் பெற்றால் மக்கள் மீண்டும் தொடர் போராட்டத்தில் ஈடுப்படுவார்கள் என்றார்.