பல்கலைகழக மாணவிகளுக்கு தொலைபேசி வழியாகதொல்லை கொடுத்த சம்பவம் தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு
யாழ்.பல்கலைகழக மாணவிகளுக்கு தொலைபேசி வழியாக தகாத முறையில் தொல்லை கொடுத்த சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருக்கின்றது.
மாணவிகளின் தொலைபேசிகளுக்கு இரவு வேளைகளில் அழைப்பெடுக்கும் நபர் ஆபாசமாக பேசி வந்துள்ளார்.
அந்த தொலைபேசி இலக்கத்தில் இருந்து அழைப்பு வராதவாறு தடுத்தாலும் வேறு இலக்கங்களில் இருந்து அழைப்பெடுத்து மாணவிகளை இம்சைக்கு உள்ளாக்கி உளவியல் ரீதியாக பாதிக்கும் வகையில் செயற்பட்டுள்ளார்.
இது தொடர்பில் மாணவிகளால் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு அறிவித்த போதிலும், நிர்வாகம் உரிய முறையில் நடவடிக்கை எடுக்கவில்லை என பாதிக்கப்பட்ட மாணவிகள் கூறியுள்ளனர்.
அத்துடன் , தமக்கு தொலைபேசியில் தொல்லை தரும் மர்ம நபர் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.
மேலும் தமது முறைப்பாட்டில் குறித்த நபரின் தொலைபேசி இலக்கத்தினையும் மாணவிகள் வழங்கியுள்ள நிலையில் அதன் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.