சீன உளவுக் கப்பல் இலங்கையை வந்தடைந்துள்ள நிலையில் , இந்திய கடற்படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்

Kanimoli
2 years ago
 சீன உளவுக் கப்பல் இலங்கையை வந்தடைந்துள்ள நிலையில் ,  இந்திய கடற்படையினர் தீவிர கண்காணிப்பில்  ஈடுபட்டு வருகின்றனர்

   இந்தியாவின் கடும் எதிர்ப்பை மீறி இன்று சீன உளவுக் கப்பல் 'யுவான் வாங் 5' இலங்கையை வந்தடைந்துள்ள நிலையில் , தமிழகத்தில் தனுஷ்கோடி முதல் தொண்டி வரையிலான இந்திய எல்லைக்குட்பட்ட ஆழ் கடல் பகுதியில் இந்திய கடற்படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றதாக கூறப்படுகின்றது.

இன்று (செவ்வாய்கிழமை) ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வந்த சீன உளவுக் கப்பல் வரும் வரும் 22 ஆம் வரை அங்கு இருக்கும். 222 மீட்டர் நீளமும், 26 மீட்டர் அகலமும் கொண்ட யுவான் வாங் 5' உளவு கப்பல் 11 ஆயிரம் டன் எடைகொண்ட பொருட்களை சுமக்கும் வல்லமை கொண்டது.

கடல் சார் கண்காணிப்பு, விண்வெளி கண்காணிப்பு உள்பட பிரமாண்டமான ராக்கெட்டுகளை ஏவும் வசதியும் இந்த கப்பலில் இருக்கிறது.

எனவே இந்த உளவு கப்பல் சேகரிக்கும் தகவல்கள் அனைத்துமே சீனாவின் ராணுவ புலனாய்வு அமைப்புக்கு அடுத்த நிமிடமே சென்று சேர்ந்துவிடும். இந்நிலையில் இதுதான் இந்தியாவுக்கு ஏற்படப் போகும் மிகப்பெரிய அச்சுறுத்தல் என்று இந்தியா உறுதியாக கருதுகிறது. தமிழகத்தில் இருந்து சுமார் 150 கி.மீ. தொலைவில் ஹம்பாந்தோட்டை துறைமுகம் இருக்கிறது.

ஆனால் யுவான் வாங்-5 உளவு கப்பல் மூலம் 750 கி.மீ. சுற்றளவுக்கு இருக்கும் ஒவ்வொன்றையும் துல்லியமாக ஆய்வு செய்ய முடியும். அதேசமயம் சீனாவின் தேசிய விண்வெளி ஆய்வு மையத்தால் இந்த கப்பல் இயக்கப்பட்டு வருகிறது.

சீனாவிடம் உள்ள மிகப் பெரிய உளவு கப்பல் இந்த யுவான் வாங்-5 கப்பல் தான். இதனால்தான் இந்த கப்பலை நினைத்து இந்திய ராணுவம் அச்சுறுத்தலாக கருதுகிறது. இந்தியாவில் எல்லைக்கு மிக மிக அருகில் சீன உளவு கப்பல் நெருங்கி வருவது இதுவே முதல் முறையாகும்.

யுவான் வாங் 5' உளவுக் கப்பலால் தென் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், சீன உளவுக் கப்பல் இலங்கைக்கு வந்ததையொட்டி ராமேசுவரம் கடல் பகுதியில் இந்திய கடற்படையினர் ஹெலிகாப்டர் மூலம் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

உச்சிப்புளி பருந்து கடற்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ராமேசுவரம் மீன்பிடி துறைமுகம், தனுஷ்கோடி அரிச்சல் முனை, அக்னீ தீர்த்தக்கரை உள்ளிட்ட கடல் பகுதியில், தாழ்வாக பறந்த படி கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக  தகவல்கள் கூறுகின்றது.

ஹெலிகாப்டரில் இருந்து கயிறு கட்டி கிழே இறங்கியும் கடற்படை வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தனுஷ்கோடி முதல் தொண்டி வரையிலான இந்திய எல்லைக்குட்பட்ட ஆழ் கடல் பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றன.

அதேசமயம் சீன உளவுக் கப்பல் வருகையையொட்டி ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதி பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் இந்திய தகவல்கள் கூறுகின்றது.