நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற மூன்று திருமண நிகழ்வுகளில் கலந்து கொண்ட 630 பேர் திடீரென வைத்தியசாலையில் அனுமதி
கண்டியில் உள்ள பிரதான நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற மூன்று திருமண நிகழ்வுகளில் கலந்து கொண்ட 630 பேர் திடீர் சுகயீனமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சுகயீனமடைந்தவர்களுக்குள் திருமண முடிந்து தேனிலவுக்காக மலேசியா சென்ற புதுமணத்தம்பதியும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
கண்டியில் உள்ள முக்கிய நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் திருமண வைபவத்தை முடித்துவிட்டு தேனிலவுக்காக மலேசியா சென்ற தம்பதியினர் மலேசியாவில் சுகவீனமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், திருமண விழாவில் கலந்து கொண்ட மேலும் பலர் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது கண்டறியப்பட்டுள்ளது. இந்த திருமணம் நடந்த நட்சத்திர ஹோட்டலில் அன்று வேறு இரண்டு திருமணங்களும் நடத்தப்பட்டுள்ளன.
திருமணத்தில் பங்கேற்றவர்களுக்கும் உடல் நலக்குறைவு ஏற்பட்டதை சுகாதார துறையினர் கண்டறிந்து, மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இறுதியில், இதை ஆய்வு செய்த சுகாதாரத் துறையினர் 630 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இது தண்ணீர் பிரச்னையாக இருக்கலாம் என சந்தேகமடைந்த சுகாதாரத்துறை அதிகாரிகள், ஹோட்டலின் பிரதான தண்ணீர் தொட்டியை சோதனையிட்டபோது, அங்கு பெரிய அழுகிய பாம்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அழுகிய பாம்பினால் இவர்கள் நோய்வாய்ப்பட்டிருக்கலாம் என சுகாதாரத் துறையினர் தற்போது சந்தேகிக்கின்றனர்.
குறித்த நீர்த்தாங்கியின் நீர் மாதிரிகள் பேராதனை பல்கலைக்கழக நீர் மாதிரி பரிசோதனை ஆய்வு கூடத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சுகாதாரப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.