அம்பேவெல நீர்த்தேக்கத்தில் மிதக்கும் மரைகளின் சடலங்கள்: மீனவர்கள் முறைப்பாடு

Prathees
2 years ago
அம்பேவெல நீர்த்தேக்கத்தில்   மிதக்கும் மரைகளின் சடலங்கள்: மீனவர்கள் முறைப்பாடு

ஹோட்டன்தன்ன தேசிய சரணாலயத்தில் சுற்றித்திரியும் பெருந்தொகையான மழரகளின் சடலங்கள் நானுஓயா அம்பேவெல நீர்த்தேக்கத்தில் மிதப்பதாக நீர்த்தேக்கத்தின் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஒரு வாரத்தில் சுமார் பத்து மரைகள் நீர்த்தேக்கத்தில் இறக்கின்றன என்று அவர்கள் சுட்டிக்காட்டினர்.

அம்பேவெல பிரதேசத்தில் ஒரு சில வேட்டைக்காரர்களால் வளர்க்கப்பட்டு கைவிடப்பட்ட பல வேட்டை நாய்கள் உணவு மற்றும் தண்ணீரைத் தேடி ஹோட்டன்தன்னையிலிருந்து வரும் மரைகளை கடித்து நீர்த்தேக்கத்திற்குள் விரட்டுகின்றன.

இவ்வாறு துரத்தப்படும் மரைகள் மிகவும் ஆழமான அம்பேவெல நீர்த்தேக்கத்தில் மூழ்கி உயிரிழப்பதாக நீர்த்தேக்கத்தில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள மீனவர்கள் விளக்கமளித்துள்ளனர்.

தற்போது அம்பேவெல நீர்த்தேக்கத்தில் சிறிய கன்றுகளிலிருந்து நன்கு வளர்ந்த பல மரைகளின் உடல்கள் மிதப்பதாகவும், தற்போதைய நிலைமை காரணமாக நீர்த்தேக்கத்தின் சுற்றுச்சூழலும் அழிக்கப்பட்டுள்ளதாகவும் மீனவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

அம்பேவெல நீர்த்தேக்கத்தில் இருந்து விடுவிக்கப்படும் நீர் வெலிமடை, ரெந்தபொல மற்றும் தலவாக்கலை ஆகிய பகுதிகளின் குடிநீர் மற்றும் பயிர்ச்செய்கைக்கு பயன்படுத்தப்படும்.

இது குறித்து வனவிலங்கு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் முறைப்பாடு தெரிவிக்கின்றனர்.

மரைகளை வேட்டையாடி கொல்லும் நாய்களை பிடித்து வேறு பகுதிக்கு விரைவில் கொண்டு செல்வதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அம்பேவெல நீர்தேக்க மீனவர்கள் வனவிலங்கு அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.