சுகாதாரத்துறைக்கு கொள்கை மாற்றம் இன்றியமையாதது: ஜனாதிபதி
முழு சுகாதார துறைக்கும் கொள்கை மாற்றம் இன்றியமையாதது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்துடன் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள மருந்து தட்டுப்பாடு குறித்து ஆராய்வதற்காக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் நியமிக்கப்பட்ட மூவரடங்கிய குழுவின் அறிக்கையும் ஜனாதிபதியிடம் நேற்று கையளிக்கப்பட்டது.
இதன்போது சுகாதாரத் துறை மற்றும் வைத்தியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மருந்து விலை அதிகரிப்பு நாட்டில் பாரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளதுடன், அத்தியாவசிய மருந்துகளுக்கு ஓரளவு நிவாரணம் வழங்குவதற்கு அரசாங்கம் கொள்கை ரீதியான தீர்மானம் எடுக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சகம், மருத்துவ விநியோக பிரிவு, மாநில மருந்து ஒழுங்குமுறைக் கழகம், மாநில மருந்து உற்பத்திக் கழகம் மற்றும் தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையம் இதுதொடர்பான குழுவின் அறிக்கை ஒருங்கிணைப்பில் உள்ள குறைபாடுகளையும் அடையாளம் கண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
இதன்படி, சுகாதார அமைச்சினால் ஒருங்கிணைப்புக் குழுவொன்றை நியமித்து மாதாந்த முன்னேற்ற மீளாய்வைப் பெறுவதற்கும் அறிக்கை முன்மொழியப்பட்டுள்ளது.
இதேவேளை, கொழும்பு தேசிய வைத்தியசாலை, களுபோவில வைத்தியசாலை மற்றும் ஜயவர்தனபுர வைத்தியசாலையின் வசதிகளை மேலும் விரிவுபடுத்த வேண்டியதன் அவசியம் குறித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கருத்து வெளியிட்டுள்ளார். வெளிநாடுகளில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு அந்நிய செலாவணியை அனுப்புவதில் ஏற்பட்டுள்ள சிரமங்கள் தொடர்பிலும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஜனாதிபதியிடம் உண்மைகளை விளக்கியுள்ளது. இந்த நாட்டில் உயர்கல்வி கொள்கைகள் அந்நிய செலாவணியை ஈட்டும் வகையில் மாற்றியமைக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அங்கு குறிப்பிட்டுள்ளார்.