களு, களனி உள்ளிட்ட பல ஆற்றுப்படுகைகளில் வெள்ள அபாயம்

Prathees
2 years ago
களு, களனி உள்ளிட்ட பல ஆற்றுப்படுகைகளில் வெள்ள அபாயம்

அடுத்த 24 மணித்தியாலங்களில் அத்தனகலு ஓயா, களு, களனி, கிங் மற்றும் நில்வலா ஆற்றுப்படுகைகளில் சில இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

தற்போதைய நிலைமை தொடர்பில் அந்தந்த ஆற்றுப்படுகை பிரதேசங்களில் வசிக்கும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டுமென திணைக்களத்தின் நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் பொறியியலாளர் எஸ்.பி.சி.சுகீஸ்வர தெரிவித்தார்.

இதேவேளை, களுகங்கை, கூடு கங்கை மற்றும் மகுரு கங்கை உப வடிநிலங்களின் மேல் நீரோடைப் பகுதிகளில் கணிசமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதுடன், தொடர்ந்தும் மழை பெய்து வருகின்றது.

இதன்காரணமாக அடுத்த 03 முதல் 24 மணித்தியாலங்களில் குடா கங்கை மற்றும் பாலிந்த கண்டி மற்றும் புலத்சிங்கள பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு உட்பட்ட தாழ்நிலப் பகுதிகளிலும் சிறு வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என நீர்ப்பாசன திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, நாட்டின் சில பகுதிகளில் இன்று 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான கடும் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் சிரோமணி ஜயவர்தன தெரிவித்துள்ளார்.