நாட்டில் நடைபெறும் IPL மற்றும் பிற உள்நாட்டுப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த சுரேஷ் ரெய்னா

#IPL
Prasu
2 years ago
நாட்டில் நடைபெறும் IPL மற்றும் பிற உள்நாட்டுப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த சுரேஷ் ரெய்னா

ஐபிஎல் வரலாற்றில் மிகவும் திறமையான பேட்டர்களில் ஒருவரான சுரேஷ் ரெய்னா இந்திய டி20 லீக் மற்றும் நாட்டில் நடைபெறும் பிற உள்நாட்டுப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

ஐபிஎல் வரலாற்றில் அதிக ஓட்டங்கள் குவித்த வீரர்களில் ஒருவரான ரெய்னா 2022 மெகா ஏலத்தில் எந்த அணியும் அவரை ஏலத்தில் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பல ஆண்டுகளாக ரெய்னா சிஎஸ்கே அணிக்கு மேட்ச் வின்னராக இருந்தவர். அவர் 205 ஐபிஎல் போட்டிகளில் 32.5 சராசரி மற்றும் 136.7 ஸ்ட்ரைக் ரேட்டில் 5528 ஓட்டங்கள் குவித்துள்ளார். 2020 ம் ஆண்டு டோனியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ரெய்னாவும் ஓய்வு பெற்றார்.

அதன் பின்னர் உள்நாட்டு போட்டிகளில் கவனம் செலுத்தி வந்த ரெய்னா தற்போது அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இந்த தகவலை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அத்துடன் இதுவரை தனக்கு ஆதரவு அளித்த பிசிசிஐ, உத்திரபிரதேச கிரிக்கெட் சங்கம், ஐபிஎல் நிர்வாகம், ராஜீவ் சுக்லா மற்றும் அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

2011 உலகக் கிண்ணத்தை வென்ற இந்திய அணியில் ரெய்னா இடம்பெற்றிருந்தார். 226 ஒருநாள் போட்டிகளில் 5,615 ஓட்டங்களும், 78 டி20 போட்டிகளில் 1,605 ஓட்டங்களும் எடுத்ததன் மூலம் அவர் தனது சர்வதேச வாழ்க்கையை முடித்தார்.