இன்றைய வேத வசனம் 12.09.2022: உமது நாமத்தை அறிந்தவர்கள் உம்மை நம்பியிருப்பார்கள்
உமது நாமத்தை அறிந்தவர்கள் உம்மை நம்பியிருப்பார்கள் - சங்கீதம் 9:10
நான் சிறுவயதாக இருக்கும் போது பள்ளிக்கு செல்வதென்றாலே எனக்கு ஒரு பயம். ஏனெனில் சில மாணவிகள் என் மனம் நோகும்படியாக என்னைக் கேலி செய்வர்.
ஆகவே இடைவேளையின்போது நூலகத்தில் ஒளிந்துகொண்டு, அங்கேயிருந்த கிறிஸ்தவ கதைபுத்தகங்களை வாசிக்கத் துவங்கினேன். “இயேசு” என்ற பெயரை முதன்முதலாக வாசித்ததும், இது என்னை நேசிக்கும் ஒருவரின் பெயரென்று அறிந்துகொண்டேன்.
அடுத்து வந்த மாதங்களில், நான் பள்ளிக்குள் நுழையும்போதெல்லாம் எனக்கு முன்னிருந்த பயமுறுத்தும் காரியங்களை எண்ணி, “இயேசுவே, என்னைக் காத்தருளும்” என்று ஜெபிப்பேன். அவர் என்னைப் பார்க்கிறார் என்றறிந்து, தைரியமாகவும், அமைதியாகவும் இருந்தேன்.
இடைப்பட்ட நேரத்தில், அந்த மாணவிகளும் என்னைக் கிண்டல் செய்வதை நிறுத்திவிட்டனர். ஆண்டுகள் உருண்டோடிவிட்டன.
கடினமான சூழ்நிலைகளின் மத்தியிலும் தேவனை நம்புவதென்பது என் வாழ்வில் தொடர்ந்து கொண்டேயிருந்தது. தேவன் உண்மையுள்ளவர் என்றெண்ணி, அவருடைய நாமத்தை நம்பி, அவரையே சார்ந்து கொண்டேன்.
தேவனுடைய நாமத்தை நம்புவதிலுள்ள பாதுகாப்பை தாவீதும் அறிந்திருந்தார். அவர் சங்கீதம் 9 ஐ இயற்றுகையில், தேவனே நீதியாய் நியாயம் செய்யும் சர்வவல்ல நியாயாதிபதி (வ.7–8, 10, 16) என்பதை அனுபவித்திருந்தார்.
எனவே தம்முடைய பகைவர்களுக்கு எதிராக யுத்தஞ்செய்கையில், தம்முடைய ஆயுதங்களையோ, இராணுவ சாமர்த்தியத்தையோ நம்பாமல், “நெருக்கப்படுகிற காலங்களில் அவரே தஞ்சமானவர்” (வ. 9) என்று தேவனை நம்பி, அதையே வெளிக்காட்டினார்.
அவருடைய நாமத்தைப் பற்றிக்கொண்டு அவரைக் கூப்பிடுகையில், எவ்வாறெல்லாம் அவர் உதவிசெய்வார் என்பதை, ஒரு சிறுமியாக நான் அனுபவித்துள்ளேன். நம் அனைவரையும் நேசிக்கும் நாமமான “இயேசு” என்ற நாமத்தை எப்பொழுதும் நாம் நம்புவோமாக.