ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கைதுசெய்வதற்காகவே கைதுகள் இடம்பெறுகின்றன – நடிகர் சமன் சம்பத் ஜயவீர

மக்களுக்காக போராடியவர்களை கைதுசெய்தால் ஏனைய தரப்பினர் அஞ்சிவிடுவர் என்பதற்காகவே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தரப்பினரை கைதுசெய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன என்று நடிகர் சமன் சம்பத் ஜயவீர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (12) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்துக்குள் அத்துமீறி நுழைந்து அதன் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தார் என்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட தமிதா அபேரத்ன பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இந்த விடயம் இத்துடன் முடிந்துவிடப் போவதில்லை. இந்த கைதுகள் தமிதாவுடன் முடிவடைந்துவிடப்போவதில்லை. நாளை நான் கைதுசெய்யப்படவுள்ளார். இந்த இடத்தில் தற்போது கூடியுள்ள கலைஞர்கள் கைதுசெய்யப்படலாம்.
மக்களுக்காக போராடியவர்களை கைதுசெய்தால் ஏனைய தரப்பினர் அஞ்சிவிடுவர் என்பதற்காகவே இவ்வாறான கைதுகள் இடம்பெறுகின்றன.
கலைஞர்களை, மிகவும் பிரசித்திபெற்றவர்களை அச்சுறுத்துவிட்டால் ஏனையவர்களும் அஞ்சி விடுவர் என்று இந்த அரசாங்கம் நினைக்கின்றது.
தமிதா அபேரத்ன இழைத்த தவறு என்னவென்றே நாம் கேட்கின்றோம்.
அவர் போராட்டத்தில் பங்கேற்ற தரப்பினருக்கு தங்களால் முடிந்த உதவிகளை செய்தார். தண்ணீர் போத்தல்களை பெற்றுக்கொடுத்தார்.
உணவுகளை பெற்றுக்கொடுத்தார். எம்மைபோன்று முன்னின்று செயற்பட்டார்.
இந்த செயற்பாடுகள் பயங்கரவாத செயற்பாடுகள் எனில் நாம் அனைவருமே பயங்கரவாதிகளாகவே கருதப்பட வேண்டும்.
சாதாரண பிரஜைகளா பயங்கரவாதிகள் என்றே கேட்கின்றேன்.
நாங்கள் ஆர்ப்பாட்டத்தையே முன்னெடுத்தேம். வேறு எந்த ஜனநாயக விரோத செயற்பாடுகளிலும் ஈடுபடவில்லை.
ஜூலை 09ஆம் திகதி கொழும்புக்கு வந்த தரப்பினர் அந்த சந்தர்ப்ப சூழ்நிலைக்கு அமைவாக ஜனாதிபதி மாளிகை, செயலகத்தை முற்றுகையிட்டனர்.



