இலங்கை வங்கி ஊழியர் சங்கம் அரை நூற்றாண்டு விழாவைக் கொண்டாடியுள்ளது.
நாட்டின் முன்னணி தொழிற்சங்கங்களில் ஒன்றான இலங்கை வங்கி ஊழியர் சங்கம் (CBEU)தனது வரலாற்றில் மிக நீண்ட வேலை நிறுத்தத்தின் அரை நூற்றாண்டு விழாவைக் கொண்டாடியுள்ளது.
100 நாட்களை கடந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வேலை நிறுத்தம், ஐம்பது வருடங்கள் நிறைவடைந்ததை முன்னிட்டு, வேலை நிறுத்தத்திற்கு தலைமை தாங்கிய தொழிற்சங்கச் செயற்பாட்டாளர்கள், தற்போதைய தொழிலாளர் தலைமைத்துவத்துடன் தமது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்ட கடந்த நிகழ்வு அண்மையில் கொழும்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றுள்ளது.
வங்கி ஊழியர்களின் தீர்க்கப்படாத பல பிரச்சினைகளால் செப்டெம்பர் 1, 1972 இல் ஆரம்பித்த வேலை நிறுத்தம், 108 நாட்களுக்குப் பின்னர் டிசம்பர் 18, 1972 அன்று உத்தியோகபூர்வமாக முடிவுக்கு வந்தது.
நாடளாவிய ரீதியில் நடைபெற்ற ஒழுங்குமுறை கூட்டங்களுக்குப் பின்னர், 31 ஆகஸ்ட் 1972 அன்று நள்ளிரவில் தொடங்கிய வேலை நிறுத்தம் நாடு தழுவிய கிளைகளில் மொத்தம் 7,500 உறுப்பினர்களில் 4,000 க்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்ட கொழும்பு வெள்ளவத்தை இராமகிருஷ்ண மிசன் மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டதாக, இலங்கை வங்கி ஊழியர் சங்கம் வெளியிட்டுள்ள "1972-2022 அரை நூற்றாண்டு ஞாபகார்த்தம்" அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய செப்டெம்பர் 1, 1972 இல், இலங்கை வங்கி, மக்கள் வங்கி, அரச அடமான வங்கி, ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கி, ஹொங்கொங் வங்கி, ஹபீப் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, இந்திய அரச வங்கி, இந்தியன் வங்கி, இலங்கை வர்த்தக வங்கி மற்றும் ஹட்டன் நஷனல் வங்கி ஆகியவற்றின் இலங்கை வங்கி ஊழியர் சங்க உறுப்பினர்கள் நூற்றுக்கு நூறு வீதம் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றதால், ஒட்டுமொத்த நாட்டின் வங்கிச் செயற்பாடுகளும் முற்றிலுமாக முடங்கின.
ஏராளமான தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்திற்கு தங்கள் ஒத்துழைப்பை தெரிவித்ததுடன், துறைமுக ஊழியர்கள் தமது இலவச மதிய உணவை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டவர்களுக்கு வழங்க ஏற்பாடு செய்தனர்.
தொழிலாளர் படையின் சில பிரிவுகள் சில இடங்களில் பணம் மற்றும் பாதுகாப்பு அளித்து இந்தப் போராட்டத்தை ஊக்குவித்தது.
பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கா தலைமையிலான அரசாங்கத்தின் நிதியமைச்சராக இருந்த கலாநிதி என்.எம்.பெரேரா, வேலை நிறுத்தத்தில் பங்கேற்ற தொழிற்சங்கத்தின், வேலை நிறுத்தத்தில் பங்குபற்றாதவர்களை கடமைகளில் ஈடுபடுத்தி, புதிய ஊழியர்களை இணைத்து, அரசாங்கத்தின் ஏனைய அதிகாரிகளின் தலையீட்டைத் தடுப்பதன் மூலம் வேலை நிறுத்தத்தை சீர்குலைக்கும் நோக்கத்துடன் நடவடிக்கைகள் எடுத்தார்.
"பலமான பொருளாதாரச் சிக்கல்கள் மற்றும் எந்தவொரு தீர்வையும் அனுமதிக்காத நிதி அமைச்சரின் கடுமையான அணுகுமுறையைக் கருத்தில் கொண்டு, வேலை நிறுத்தத்தைத் தொடர்வது கடினமான பணியாக இருந்தது. எனவே டிசம்பர் 15, 1972 அன்று நடைபெற்ற பொதுக் கூட்டத்தின் தீர்மானத்திற்கு அமைய, வரலாற்றுச் சிறப்புமிக்க வேலை நிறுத்தம் டிசம்பர் 18, 1972 அன்று முடிவுக்கு வந்தது.
வேலை நிறுத்தம் முடிவடைந்த பின்னர், அதில் கலந்துகொண்ட தொழிலாளர்கள் மீது பாரிய அடக்குமுறைகள் மேற்கொள்ளப்பட்டு, இழந்த உரிமைகளை வென்றெடுக்க சுமார் ஐந்தாண்டுகள் தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபட வேண்டியிருந்தது.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வேலை நிறுத்தத்தின் அரை நூற்றாண்டு நிறைவை முன்னிட்டு இடம்பெற்ற நினைவு நிகழ்வில் பேராசிரியர் அர்ஜுன பராக்கிரம அதிதி உரையை நிகழ்த்தியதுடன், இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தின் சிரேஷ்ட பிரதித் தலைவரும், தாய் சங்கத்தின் தலைவருமான ருசிருபால தென்னகோன் தொழிற்சங்கம், 1972 வேலைநிறுத்தம் பற்றி உரையாற்றியதுடன், 1978இல் தாய் சங்கத்தின் தலைவராகப் பணியாற்றிய ஏ. டி. நவரத்ன நினைவு உரையை நிகழ்த்தினார்.
1972 இல் வேலைநிறுத்தத்தில் பங்கேற்று, அப்போது தொழிற்சங்கத்தை வழிநடத்திய, இன்னும் உயிருடன் இருக்கும் ஆர்வலர்கள் பலர் இந்த நினைவேந்தல் நிகழ்ச்சியில் பங்கேற்றதாக வங்கி தொழிற்சங்க செயற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.