இன்றைய வேத வசனம் 16.09.2022: கர்த்தருடைய ஊழியக்காரன் எல்லாரிடத்திலும் சாந்தமுள்ளவனுமாயிருக்க வேண்டும்
கர்த்தருடைய ஊழியக்காரன் எல்லாரிடத்திலும் சாந்தமுள்ளவனுமாயிருக்க வேண்டும்" (2 தீமோ 2:24.)
நம்மிலுள்ள கல்லான பாகத்தையெல்லாம் ஆண்டவர் நம்மை வெற்றிகொண்டு எடுத்துப் போடும்பொழுதும், நாம் இயேசு கிறிஸ்துவின் சிந்தைக்குள்ளாக ஆழ்ந்த காட்சிகளைக் காணும்பொழுதும்தான் புறாவைப்போன்ற மென்மையான ஆவி, தெய்வபயமற்ற இருள் நிறைந்த இவ்வுலகில் எவ்வளவு அரிது என்று உணருகிறோம்.
ஆவியானவரின் கிருபைகள் தற்செயலாகத் தாமாக வந்து இறங்குகிறவையல்ல. கிருபையின் நிலைகளை நாம் கண்டு கொண்டு அவற்றைப் பற்றிக்கொள்ளாவிடில், அவற்றை நமது சிந்தையில் வளர்க்காவிடில், அவை நமது இயற்கையில் ஒன்றிப்போய் நமது நடத்தையில் வெளிப்படமாட்டா.
கிருபையின் ஒவ்வொரு முன்னேற்ற நிலையையும் முதலில் நாம் கண்டுகொள்ள வேண்டும். அதன்பின் அதைப் பெற்றுக் கொள்ள ஜெபத்துடன் தீர்மானித்திடல் வேண்டும்.
முழுமையான மென்மை பண்பைப் பெறுவதற்கான துன்பங்களை அனுபவிக்க அநேகருக்கு விருப்பமில்லை. மென்மைப் பண்புள்ளவர்களாக ஆவதற்குமுன் நாம் சாக வேண்டும். நமது தன்னலத்தை நசுக்கி ஒடுக்கவேண்டும். அப்பொழுதுதான் இதயம் பிழியப்பட்டு மனதின்மீது வெற்றி கிடைக்கும். சிலுவை மரணம் துன்பம் நிறைந்தது.
மனம் மட்டும் நிரம்பக்கூடிய சுத்திகரிப்பைப்பற்றியும் வெளிப்படையாக இந் நாள்களில் நாம் அறிவோம். அது ஒரு மத சம்பந்தமான மனநிறைவே ஆகும். ஏதோ கடமைக்காக ஒருவர் தன்னைப் பலிபீடத்தில் வைத்துவிட்டு, பலிபீடம் என்னைத் தூய்மைப்படுத்திவிட்டது என்பதாகும். அப்படிப்பட்ட ஒருவர், அதன்பின் கவலையற்ற, பொறுப்பற்ற முறையில் இறையியல் கருத்துக்களைக்கொண்டு ஆண்டவரைப்பற்றிய ஆழ்ந்த கருத்துக்களை அறிய முற்படுவார்.
அப்படிப்பட்டவருடைய இதயம் உடையவில்லை. இதயக் கடினம் தூளாக்கப்படவில்லை. கெத்செமனேயில் ஆண்டவர் தனிமையாக அனுபவித்தப் பாடுகளையும், பெரு மூச்சையும் அனுபவிக்கவில்லை.
கல்வாரியின் மரணக்குறிகள் அத்தகையோரிடம் காணமுடியாது. அவர்கள் மனதில் வெறுமையான கல்லறையின் இனிய மென்மையான, வெற்றி நிறைந்து வழிந்தோடிவரும் வெற்றி வாழ்க்கை, கிறிஸ்துநாதரின் உயிர்த்தெழுதலின் நாளான அந்த இளவேனிற்காலத்தின் அதிகாலையில் வந்ததுபோல் வராது.