தேயிலைத் தோட்டங்களில் உள்ள தொழிலாளர்களின் வாழ்க்கை நிலைமைகள் குறித்து ஐ நா கவலை!

Kanimoli
2 years ago
தேயிலைத் தோட்டங்களில் உள்ள தொழிலாளர்களின் வாழ்க்கை நிலைமைகள் குறித்து ஐ நா கவலை!

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவைக்கு தனது அறிக்கையை சமர்ப்பித்துள்ள சமகால அடிமைத்தனம் பற்றிய ஐக்கிய நாடுகளின் சிறப்பு அறிக்கையாளர், இலங்கைத் தொழிலாளர்களின், குறிப்பாக தேயிலைத் தோட்டங்களில் உள்ள தொழிலாளர்களின் வாழ்க்கை நிலைமைகள் குறித்து கவலையை எழுப்பியுள்ளார்.

மனித உரிமைகள் பேரவையின் 51வது சம்பிரதாய அமர்வில் உரையாற்றிய ஐக்கிய நாடுகளின் தற்கால அடிமைத்தனத்தின் சிறப்பு அறிக்கையாளர் டொமோயா ஒபோகாடா, இலங்கையின் முக்கிய கவலைகளில் ஒன்று இலங்கைத் தொழிலாளர்களின் வாழ்க்கை நிலைமைகள் ஆகும் என்று குறிப்பிட்டுள்ளார்.

உதாரணமாக, ஒரு தேயிலைத் தோட்டத்தில், தேயிலை கொழுந்து பறிக்கும் பெண்கள், ஆண்களை விட இரண்டு மடங்கு பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்ற போதும், ஆண்களுக்கு கிடைக்கின்ற சம்பளத்தையே அவர்கள் பெறுகின்றனர் என்பதை அறிந்து கலக்கமடைந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் ஆடைத் தொழில் மற்றும் வீட்டு வேலைகளில் இதே பாகுபாடு நீடிப்பதாக விசேட அறிக்கையாளர் குறிப்பிட்டுள்ளார்.

பெண் தொழிலாளர்கள் மத்தியில் உள்ள முக்கிய பிரச்சினை பாலியல் துன்புறுத்தல் மற்றும் பெண் தொழிலாளர்களுக்கு எதிரான வன்முறை என்பனவாகும். எனினும் பழிவாங்கப்படலாம் என்ற பயம் காரணமாக முறைப்பாடுகள் செய்யப்படுவதில்லை.

இதேவேளை இலங்கையில் வழங்கப்படும் சம்பளம் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுடன் ஒத்துப்போவதில்லை. இந்தநிலையில் வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்லும் இலங்கையர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளர் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை சமகால அடிமை முறைகள் குறித்து ஐக்கிய நாடுகளின் சிறப்பு அறிக்கையாளர் எழுப்பிய கவலைகளுக்கு இலங்கையும் அமர்வின்போது பதிலளித்துள்ளது.

அனைத்து இன சமூகங்களைச் சேர்ந்த பெருந்தோட்டத் துறை ஊழியர்கள் எதிர்கொள்ளும் சவால்களை இலங்கை அரசாங்கம் அறிந்துள்ளதுடன், இந்த சவால்களைத் தணிக்க சம்பந்தப்பட்ட அமைச்சின் ஊடாக பல நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக இலங்கையின் பிரதிநிதி தெரிவித்தார்.

கிராமப்புற பெண்களின் பாதிக்கப்படக்கூடிய நிதி நிலை குறித்து சிறப்பு அறிக்கையாளரின் கவலை குறித்து பதிலளித்த இலங்கையின் பிரதிநிதி, கிராமப்புறங்களில் உள்ள பெண்கள் மத்தியில் வறுமை மற்றும் கடன் சுமையை போக்க பல முற்போக்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜிஎஸ்பி பிளஸ் நன்மைகள் தொழிலாளர்களுக்கு வழங்கப்படவில்லை என்று சிறப்பு அறிக்கையாளரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள கவலைக்கு பதிலளித்த இலங்கையின் பிரதிநிதி பல ஆண்டுகளாக ஜிஎஸ்பி பிளஸ் சலுகைகள் வேலை வாய்ப்புகளின் வளர்ச்சிக்கு வழிவகுத்துள்ளன.

அத்துடன் பெண்கள் உட்பட பாதிக்கப்படக்கூடிய சமூகங்கள், அத்துடன் அவர்களின் வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்தவும் இந்த சலுகை உதவியுள்ளது. என்று இலங்கை பிரதிநிதி குறிப்பிட்டார். புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நலனுக்காக இலங்கை அரசாங்கம் அதிக முன்னுரிமை அளிப்பதாகவும் இலங்கையின் பிரதிநிதி தெரிவித்தார்.