இன்றைய வேத வசனம் 17.09.2022: கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோலஇ ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்.
மன்னிப்பு என்பது கடுமையான ஒரு சொல்லாகவும், பாரமான செயலுமாய் இன்றைய சூழலில் மாறிவிட்டது. இந்த வார்த்தையை வருடம் ஒருமுறை புனித வெள்ளியன்று தியானித்து துக்கம் கொண்டாடி, பிறகு இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிவிடுகிறோம்.
கிறிஸ்துவின் மன்னிப்பு இரண்டு மிகபெரிய உண்மையை வெளிப்படுத்துகிறது. முதலாவதாக, விலை மதிக்க முடியாத மன்னிப்பு (very costly) அதை சர்வ சாதாரணமாக (1 Cross + 3 Nails = 4 given) என்று சொல்லுகிறோம்.
ஆனால் தேவன் நம்மை மன்னிப்பதற்காக நம் பாவத்திற்கு அவர் கொடுத்த விலை, தன் சொந்த குமாரனின் இரத்தம். இதை அநேக நேரம் உணராமல் இருப்பதால் தான், அடிக்கடி தவறி விழுந்த பாவத்திலேயே, மறுபடியும் துணிகரமாய் விழுகிறோம்.
இரண்டாவதாக, பெற்ற மன்னிப்பை பகிர மறுப்பது. நமக்கு தேவன் எவ்வளவு மன்னித்தார் என்பதை ஒவ்வொருநாளும் உணர மறுக்கின்றபோது பிறருக்கு நாம் மன்னிப்பது என்பது மலையை பெயர்ப்பது போன்ற செயலாய் மாறுகிறது.
இயேசுவை நேசிக்கும் ஒரு நபர் அடிக்கடி தவறி, பாவ வாழ்க்கையில் விழுந்து வந்தார். ஒவ்வொரு முறை எழும்பும்போதும் என்னை மன்னியும் இயேசுவே என்று உண்மையாக கருத்தாக ஜெபிப்பதுண்டு.
தான் மறுபடியும் பாவம் செய்வதால் தேவனை துக்கப்படுத்துகிறேன், அவருக்கு வேதனை உண்டாக்குகிறேன் என்றெல்லாம் மனம் உடைந்து ஜெபிப்பார்.
ஆனால் தன் பாவத்திற்காக இயேசு சிந்தின விலையேறப்பெற்ற இரத்தத்தின் முழு மதிப்பையும், இயேசுவின் இரத்தம் சிந்தப்படும்போது பிதாவின் இருதயம் எப்படி துடிதுடித்திருக்கிறது என்ற எண்ணமும் இல்லாதவராய் வாழ்ந்து வந்தார்.
ஒருநாள் அவர் தான் மிகவும் நேசித்த மகளை பார்க்க சென்றபோது அவள் சிறிய விபத்தில் காயம் அடைந்து வீட்டுக்கு கொண்டு வரப்பட்டாள். தன் மகள் இரத்தம் சொட்ட சொட்ட வீட்டிற்குள் அழைத்து வந்ததை பார்த்த அவர் உருக்குலைந்து, தன் மகளை தூக்கிக்கொண்டு மருத்துவமனை விரைந்தார்.
மருத்துவமனைக்கு செல்லும் வழியில் அவர் கண்களில் தாரை தாரையாக கண்ணீர், அந்த நொறுங்கிய நிலையில் அவர் காதுகளில் ஒரு குரல், “வலிக்கிறதா” இதேபோல் தான் என்னுடைய உள்ளமும் நீ பாவம் செய்யும்போது துடிக்கிறது, வேதனை படுகிறது. காரணம் உன் பாவத்திற்காக என் குமாரனுடைய இரத்தத்தையே கொடுத்தேனே என்ற ஏக்கம் நிறைந்த சத்தம்.
இயேசுவின் மன்னிப்பை அது வரை அலட்சியப்படுத்தியவர் அன்று தன் தவறை உணர்ந்து முழுமையுமாக மனம் திரும்பினார். “தேவன் நமக்கு தந்த மன்னிப்பு விலை மதிக்க முடியாதது” அதை இனியாவது உணர்வோம்.
அதேநேரம் நாம் பெற்ற மன்னிப்பை பகிர மறுப்பதும் பாவமே. ஒருவேலைக்காரனுக்கு ராஜா பதினாயிரம் தாலந்து கடனை மன்னித்தார் ( மத்தேயு 18:24-35). ஆனால் அந்த வேலைக்காரனோ தன்னிடம் 100 வெள்ளிக்காசு கடன்பட்டவனை, மன்னிக்காமல் அவனை கொடுமைப்படுத்தி காவலில் வைத்தான்.
தனக்கு ராஜா மன்னித்ததின் அளவை அந்த வேலைக்காரன் உணரவில்லை. 10,000 தாலந்தின் மதிப்பு இன்றைய சூழலில், யூதகணக்கெடுப்பின்படி பார்த்தால் (உதா ) ஒரு வருடத்திற்கு 300 தினார் (50 வாரம் x 6 நாள் விடுமுறை நாட்கள் போக) அவன் சம்பளம் என்றால் 20 வருடத்திற்கு 6000 தினார். அவன் 20 வருடம் உண்மையாக உழைத்து 6000 தினார் செலுத்தி தன் கடனை அடைக்க நினைத்தால் அவனால் 1 தாலந்து கடனைதான் அடைக்க முடியும்.
மீதம் 999 தாலந்தை அடைக்க அவன் 2,00,000 வருடம் உழைக்க வேண்டும். ராஜா அவனுக்கு மன்னித்த அளவை யூகிக்கக் கூட முடியாது.
அவ்வளவு அதிகமாய் அவனுக்கு மன்னித்தார். ஆனால் அந்த பொல்லாத வேலைக்காரன் தான் மன்னிக்கப்பட்ட அளவை உணராமல் போனதால், அவனால் தன்னிடம் 100 வெள்ளிகாசு கடன் பட்டவனை மன்னிக்க முடியவில்லை.
நம் சந்ததியில் மன்னிப்பை உணர்ந்தவர்களும், மன்னிப்பை பகிர்ந்தவர்களும் எழும்பும்போது தேவனின் உள்ளம் மகிழும். பாவத்திற்கும், பகைக்கும் வாய்ப்பின்றி பரிசுத்தமும், பாசமும் எழுப்புதலுக்கு பெரும் வழியை வகுக்கும். ஆமென்..
மன்னிப்பை உணர்வோம்! மன்னிப்பை பகிர்வோம்!
ஒருவரையொருவர் தாங்கி, ஒருவர்பேரில் ஒருவருக்குக் குறைபாடு உண்டானால், கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள். (கொலோசெயர் 3:13)