மியான்மரில் ராணுவ ஹெலிகாப்டர்கள் பள்ளியை குறிவைத்து தாக்குதல்- 7 குழந்தைகள் உட்பட 13 பேர் உயிரிழப்பு

#Attack #School #Death
Prasu
1 year ago
மியான்மரில் ராணுவ ஹெலிகாப்டர்கள் பள்ளியை குறிவைத்து தாக்குதல்- 7 குழந்தைகள் உட்பட 13 பேர் உயிரிழப்பு

மியான்மரில் உள்ள பள்ளி ஒன்றின் மீது ராணுவ ஹெலிகாப்டர்கள் நடத்திய துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 7 குழந்தைகள் உட்பட 13 பேர் உயிரிழந்துள்ளனர். 

மேலும், 17 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் மத்திய சகாயிங் பிராந்தியத்தில் உள்ள லெட் யெட் கோன் என்கிற கிராமத்தில் நடந்துள்ளது. 

இங்குள்ள புத்த மடாலயத்தில் உள்ள பள்ளியின் மீது ராணுவ ஹெலிகாப்டர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

டிஆர்டி வேர்ல்ட் என்கிற செய்தி நிறுவனம் அளித்த தகவலின்படி, துப்பாக்கிச் சூட்டில் சில குழந்தைகள் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர். 

மற்றவர்கள் ராணுவத்தினர் கிராமத்திற்குள் நுழைந்து நடத்திய தாக்குதலில் இறந்தனர். மேலும் இறந்தவர்களின் சடலங்கள் பின்னர் இராணுவத்தால் 11 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நகரத்திற்கு கொண்டு செல்லப்பட்டு புதைக்கப்பட்டதாக செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. 

2020 பிப்ரவரி 1-ம் தேதி இடம்பெற்ற சதிப்புரட்சியைத் தொடர்ந்து மியான்மர் இராணுவ ஆட்சிக்குழு நாட்டின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.