ஹிஜாப் அணிய மறுத்ததால் பெண் செய்தியாளருக்கு பேட்டி அளிக்க மறுத்த ஈரான் அதிபர்

#Iran
Prasu
1 year ago
ஹிஜாப் அணிய மறுத்ததால் பெண் செய்தியாளருக்கு பேட்டி அளிக்க மறுத்த ஈரான் அதிபர்

ஐ.நா. பொதுக்குழு கூட்டத்திற்கு பங்கேற்பதற்காக ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி அமெரிக்காவுக்கு வந்துள்ளார். 

அமெரிக்கா வந்துள்ள ஈரான் அதிபர் ரைசியிடம் பேட்டி எடுக்க அமெரிக்காவின் பிரபல செய்தி நிறுவனமான CNN திட்டமிட்டிருந்தது. ஈரான் அதிபரிடம் CNN செய்தி நிறுவனத்தின் மூத்த செய்தியாளர் கிறிஸ்டினா அமன்புர் பேட்டி எடுக்க திட்டமிட்டிருந்தார்.

 ஆனால், பேட்டி எடுக்க வேண்டுமானால் செய்தியாளர் கிறிஸ்டினா ஹிஜாப் அணிய வேண்டும் என ஈரான் அதிபர் ரைசி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், தான் அமெரிக்காவில் இருப்பதாகவும் இங்கு ஹிஜாப் சட்டமில்லை என்றும் கிறிஸ்டினா தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து கிறிஸ்டினாவுக்கு பேட்டி அளிக்க ஈரான் அதிபர் மறுத்துவிட்டார். மேலும், அந்த நிகழ்ச்சியும் ரத்து செய்யப்பட்டுவிட்டது. 

இது தொடர்பாக ஈரான் அதிபருக்காக வைக்கப்பட்ட இருக்கை காலியாக இருக்க அதற்கு எதிர்புறம் தான் அமர்ந்திருப்பது போல் உள்ள புகைப்படத்தை வெளியிட்டு கிறிஸ்டினா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு பதிவில், பேட்டி தொடங்க திட்டமிடப்பட்டிருந்த 40 நிமிடங்களுக்கு பிறகு அதிபரின் உதவியாளர் வந்தார். 

அவர், இது புனித மாதமான மொகரம் என்பதால் நான் ஹிஜாப் அணிய வேண்டும் என அதிபர் ரைசி அறிவுறுத்தியதாக கூறினார். நான் அதை மென்மையாக ஏற்கமறுத்துவிட்டேன். நாம் இப்போது நியூயார்க்கில் இருக்கிறோம். 

இங்கு ஹிஜாப் தொடர்பாக சட்டங்களோ, பழக்கமோ கிடையாது என்றேன். ஈரானுக்கு வெளியே நடைபெறும் பேட்டிகளில் எந்த ஈரான் அதிபரும் என்னிடம் ஹிஜாப் அணியவேண்டும் என கூறவில்லை என நான் உதவியாளரிடம் கூறினேன். 

நான் ஹிஜாப் அணியவில்லை என்றால் நேர்காணல் நடைபெறாது என திட்டவட்டமாக கூறினார். மேலும், இது மரியாதை தொடர்பானது என்றார். ஆனால், இந்த எதிர்பாராத கட்டுப்பாட்டை நான் ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறினேன். 

பின்னர், நாங்கள் அங்கிருந்து புறப்பட்டுவிட்டோம். நேர்காணல் நடக்கவில்லை. ஈரானில் போராட்டங்கள் நடைபெற்று வரும் மக்கள் கொல்லப்படும் சூழ்நிலையில் அதிபர் ரைசியுடன் பேசுவது மிகவும் முக்கியம் என கருதுகிறேன் என்றார்.