நாட்டின் முதல் இரவு சபாரி பூங்காவாக பின்னவல மிருகக்காட்சிசாலையை பெயரிட தீர்மானம்

நாட்டின் முதலாவது "நைட் சஃபாரி" மிருகக்காட்சிசாலையாக பின்னவல மிருகக்காட்சிசாலைக்கு பெயரிட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விவசாய, வனவிலங்கு மற்றும் வன வளங்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
பின்னவல மிருகக்காட்சிசாலை மற்றும் யானைகளின் தங்குமிடம் தொடர்பான பிரச்சினைகள் தொடர்பில் இன்று காலை பொறுப்பு அமைச்சர் மஹிந்த அமரவீரவிற்கும் வர்த்தக சமூகத்தினருக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி பின்னவல மிருகக்காட்சிசாலை மற்றும் யானைகள் சரணாலயத்தை இரவு சபாரி பூங்காவாக பராமரிக்க முதலில் முன்மொழியப்பட்டுள்ளது.
இப்பிரதேசத்தில் பணிகள் மாலை 05.00 மணியளவில் முடிவடைவதால், வியாபார நடவடிக்கைகளில் இடையூறு ஏற்படுவதால், நாளாந்தம் அரசாங்கத்திற்கு பெருமளவு நஷ்டம் ஏற்படுவதாகவும் வர்த்தகர்கள் அமைச்சரிடம் தெரிவித்துள்ளனர்.
இதன்படி பின்னவல மிருகக்காட்சிசாலை மற்றும் யானைகள் தங்குமிடத்தை சூழவுள்ள பகுதியை இரவு நேர சபாரி பூங்காவாக பராமரிப்பதில் சட்டரீதியான பாதிப்பு உள்ளதா என விலங்கியல் திணைக்கள பணிப்பாளர் நாயகத்திடம் அமைச்சர் வினவியுள்ளார்.
அவ்வாறான சட்டத் தடைகள் எதுவும் இல்லை என சுட்டிக்காட்டிய அமைச்சர் மஹிந்த அமரவீர, இந்தப் பிரதேசத்தை இரவு நேர சபாரி பூங்காவாக நடத்தும் யோசனையை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.



