ரணில் விக்ரமசிங்கவினால் மேற்கொள்ளப்பட்ட அதியுயர் பாதுகாப்பு வலய பிரகடனமானது - மைத்திரிபால சிறிசேன

Kanimoli
1 year ago
ரணில் விக்ரமசிங்கவினால் மேற்கொள்ளப்பட்ட அதியுயர் பாதுகாப்பு வலய பிரகடனமானது - மைத்திரிபால சிறிசேன

சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவினால் மேற்கொள்ளப்பட்ட அதியுயர் பாதுகாப்பு வலய பிரகடனமானது, மற்றுமொரு மக்கள் எழுச்சிக்கே வழி வகுக்கும் என முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன எச்சரித்துள்ளார்.

அரசாங்கத்தின் வேலைத் திட்டங்களை மக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பதை விடுத்து அதற்கு நேர் எதிரான செயற்பாடுகளையே அரசாங்கம் மேற்கொள்வதாக கொழும்பில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போது அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், “பண்டாரநாயக்கவும் அவரது துணைவியாரும் முற்போக்கான கட்சிகளை ஒன்றிணைத்தே அரசாங்கத்தை அமைத்தனர். அந்தக் கொள்கையே எமக்குள்ளும் இருக்கின்றது. ஆகவே முற்போக்கான கட்சிகளை இணைத்துக்கொண்டு எதிர்காலத்தில் கூட்டணியொன்றை அமைத்து மக்கள் மயப்படுத்தப்பட்ட அரசாங்கத்தை உருவாக்க எதிர்பார்க்கின்றோம்.

அதியுயர் பாதுகாப்பு வலயத்தை ஏன் அமைத்தீர்கள் என அதனை உருவாக்கியவர்களிடமே கேட்கவேண்டும். இது சிறந்த விடயம் அல்ல. இவ்வாறான விடயங்களை செய்யச் செய்ய, மக்களின் எழுச்சியே அதிகரிக்கும்.

ஆகவே மக்களின் நெருக்கடி நிலைமையை இல்லாது செய்வதுடன், இதுபோன்ற தீர்மானங்களை மேற்கொள்ளும் போது, மக்கள் மேலும் அரச விரோத செயற்பாடுகளில் ஈடுபடுவார்கள். மக்களுக்கு இருக்கும் பாரிய நெருக்கடி நிலைமையுடன் இன்று மக்கள் எவ்வாறு வாழ்கின்றார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்.

உங்களுக்கும் எனக்கும் எம் அனைவருக்கும் பொருளாதார நெருக்கடியின் பிரதி பலனை உணர முடிந்துள்ளது.

அவ்வாறான நிலைமையில் மக்களை அமைதிப்படுத்தி, அவர்களுக்கு விடயங்களை தெளிவுபடுத்தி, அவர்களுக்கு சரியான மார்க்கத்தை காண்பித்து, அரசாங்கத்தின் பொருளாதார வேலைத் திட்டங்கள் இவைதான் என தெளிவுபடுத்தி, அரச அதிகாரிகளை அது தொடர்பில் தெரியப்படுத்தும் வேலைத்திட்டங்களையே முன்னெடுக்க வேண்டும். ஆனால், அதற்கு நேர் எதிரான செயற்பாடுகளே இடம்பெறுகின்றன.

தற்போது உள்ளதைப் போன்ற தேசிய சபையை நாம் எதிர்பார்க்கவில்லை. அனைத்துக் கட்சி அரசாங்கத்தை உருவாக்கும் வகையில் முதலில் தேசிய சபையை உருவாக்கி, அந்த தேசிய சபைக்கு, அதிபருடன் கலந்துரையாடி, பிரதமர் ஒருவரை நியமித்தல். அதன்பின்னர் தேசிய சபையின் கருத்தாக்கத்திற்கு அமைய அதிபரும் பிரதமரும் கலந்துரையாடி, 20 இற்கும் குறைவான அமைச்சரவை அமைச்சர்களை நியமிப்பதாகும்.

தேசிய சபை உருவாக்கத்தின் பின்னரான செயற்பாடுகளை முதலிலேயே செய்துவிட்டு தேசிய சபையை இறுதியாக உருவாக்கியுள்ளனர். அவ்வாறு இருக்கும் போது அதில் எவ்வாறு இணைவது.

மக்களின் நெருக்கடி நிலைமையை தணிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமாயின், அதற்கு ஆதரவு வழங்க முடியும்” என கேள்வி எழுப்பியுள்ளார்.