இராணுவத்தினரை களத்தில் நிறுத்தி போராட்டங்களை முடக்க முடியாது - தலைவர் லால் பங்கமுகே

Prasu
1 year ago
இராணுவத்தினரை களத்தில் நிறுத்தி போராட்டங்களை முடக்க முடியாது - தலைவர் லால் பங்கமுகே

இராணுவத்தினரை களத்தில் நிறுத்தி போராட்டங்களை முடக்க முடியாது என்பதை ரணில் விக்கிரமசிங்கவுக்கு தெரியப்படுத்திக்கொள்ள விரும்புவதாக சுயாதீன துறைமுக சேவையாளர்கள் சங்கத்தின் தலைவர் லால் பங்கமுகே தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்கள் மூன்று வேளைகள் உணவு உண்ண முடியாத நிலைமையில் இருக்கும்போது பாடசாலை மாணவர்கள் காலை வேளைகளில் மயங்கி விழும் நிலையில் அதிபாதுகாப்பு என்ற பெயரில் ரணில் ராஜபக்ஷ தலைமையிலான இராணுவத்தினர் வன்முறைகளை கட்டவிழ்த்து விடுகின்றனர்.

இந்த நாட்டின் இளைஞர், யுவதிகள், தொழில்புரியும் தரப்பினர், தொழில்வாய்ப்பை இழந்த தரப்பினர், மந்தபோசணையால் பாதிக்கப்பட்டு இருக்கும் தரப்பினர் என சகலரும் வீதிக்கு இறங்கி எதனை கோருகின்றனர்?

அதிபாதுகாப்பு வலயங்களை பிரகடனப்படுத்திக்கொண்டு உண்மையில் எதனை எதிர்பார்க்கின்றீர்கள் என்றே நாம் இந்த அரசாங்கத்திடம் கேட்கின்றோம்.

நாட்டு மக்கள் பட்டினியில் வாடுகின்றனர்.

வாழ்வதற்கு வழியில்லை என்று பட்டினியில் வாடும் தரப்பினர் வீதிக்கு இறங்கி கோஷமெழுப்புகின்றனர்.

நாட்டின் பொருளாதார நெருக்கடியால் பாரியளவிலானோர் தொழில்வாய்ப்பை இழந்துள்ளனர்.

சீரான மின்விநியோகம் இன்மையால், எரிபொருள் பற்றாக்குறையால் எமது தொழிற்றுறைகள் பாரியளவு பாதிப்பை எதிர்கொண்டுள்ளன.

இவ்வாறான நெருக்கடிகளால் பட்டினியில் கிடக்கும் மக்கள் வீதிக்கு இறங்கி போராடும்போது அதிபாதுகாப்பு என்ற பெயரில் போராட்டங்களை ஒடுக்குவதற்கான நடவடிக்கைகளை இந்த அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.

கொலைக்கார இராணுவத்தினரை களத்தில் நிறுத்தி போராட்டங்களை முடக்க முடியாது என்பதை ரணில் விக்கிரமசிங்கவுக்கு தெரியப்படுத்திக்கொள்ள விரும்புகின்றேன்.