கஜிமா தோட்ட தீ விபத்து குறித்து ஒரு வாரத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு பிரதமர் கோரிக்கை

Prathees
1 year ago
கஜிமா தோட்ட தீ விபத்து குறித்து ஒரு வாரத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு பிரதமர் கோரிக்கை

தொட்டலங்க கஜிமா தோட்டத்தில் வீடுகள் எரிக்கப்பட்டமை தொடர்பில் முறையான மற்றும் பக்கச்சார்பற்ற விசாரணைகளை நடத்தி ஒரு வாரத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு பிரதமர் தினேஷ் குணவர்தன இன்று அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

கொழும்பு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற கொழும்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலேயே அது இடம்பெற்றுள்ளது.

கஜிமா தோட்டத்தில் தொடர்ந்தும் வீடுகள் எரிக்கப்படுவது தொடர்பில் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க விடுத்த கோரிக்கைக்கு அமைய முறையான விசாரணைக்கு பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளைஇ தீயில் சிக்கிய கஜிமா தோட்ட வீடுகளை  கொழும்பு மாவட்ட செயலாளர் பிரதீப் யசரத்ன சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டார்.

தொட்டலங்க கஜிமாவத்த வரிசை வீடுகளில் ஏற்பட்ட தீ விபத்தில் 60 வீடுகள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதுடன் மேலும் 11 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

அந்த வீடுகளில் இருந்த 360 பேர் தற்போது களனி நாடி விகாரை மற்றும் மூவதொர உயன அடுக்குமாடி குடியிருப்பு சனசமூக மண்டபத்தில் தற்காலிகமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

தீயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி நிவாரணம் வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜப்பானில் இருந்து ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவிடம் நேற்று இரவு பணிப்புரை விடுத்துள்ளார்.