உலகளாவிய அரசியல் போக்குகள் பொருளாதார நெருக்கடியை மேலும் மோசமாக்கியுள்ளது: ஆசிய அபிவிருத்தி வங்கி கூட்டத்தில் ஜனாதிபதி

Prathees
1 year ago
உலகளாவிய அரசியல் போக்குகள் பொருளாதார நெருக்கடியை மேலும் மோசமாக்கியுள்ளது: ஆசிய அபிவிருத்தி வங்கி கூட்டத்தில் ஜனாதிபதி

கொவிட் தொற்றுநோய் மற்றும் உக்ரைன் யுத்தம் காரணமாக உருவான உலகளாவிய பொருளாதார ஸ்திரமின்மையின் பாதகமான விளைவுகள், உணவு, எரிபொருள் மற்றும் உரங்களின் அதீத விலை உயர்வானது தாங்க முடியாத நிலைமையை ஏற்படுத்தியுள்ளதாக ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

உலகளாவிய அரசியல் போக்குகள் பொருளாதார நெருக்கடியை மேலும் மோசமாக்கியுள்ளது என்று ஜனாதிபதி கூறினார்.

பிலிப்பைன்ஸின் மணிலாவில் உள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஆசிய அபிவிருத்தி வங்கி ஆளுநர்களின் 55 ஆவது வருடாந்த கூட்டத்தின் பிரதான அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவிக்கையில், அதிகரித்த உணவு மற்றும் எரிசக்தி விலைகள் குறைந்த நடுத்தர வர்க்க வளர்ச்சிக்கு இட்டுச் செல்கின்றன மற்றும் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் பாதிக்கப்படக்கூடிய சமூகத்திற்கு மேலும் பாதுகாப்பின்மையை ஏற்படுத்துகின்றன.

பாரிய பொருளாதார அழுத்தங்களுக்கு மத்தியில், நாட்டின் கடன் நிலைத்தன்மையை மீட்பதற்கு இலங்கை முன்னோடியில்லாத வகையில் நிதி முயற்சியை மேற்கொண்டு வருகிறது.

கடனை நிலைநிறுத்துவதற்கான இந்த முயற்சிகளுக்கு இலங்கையின் கடனாளிகள் மற்றும் அனைத்து பங்குதாரர்களும் ஆதரவளிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

இந்த ஆழமான மற்றும் அடக்குமுறையான சீர்திருத்தங்களுக்கு உள்ளாகும் போது இலங்கை அதிகரித்து வரும் வேலையில்லா திண்டாட்டத்தையும், வாங்கும் சக்தி வீழ்ச்சியையும் சந்தித்து வருகிறது.

எவ்வாறாயினும், சமூகத்தில் மிகவும் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு ஏற்படும் பாதகமான விளைவுகள் குறித்து அரசாங்கம் அறிந்திருப்பதாகவும், அதற்கேற்ப சமூக பாதுகாப்பிற்காக அதிக நிதி ஒதுக்கீடுகள் மற்றும் வளங்களை ஒதுக்குவதற்கு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளதாக ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.