ஐம்பது இலட்சம் ரூபா பெறுமதியான பேருந்தை திருடிச் சென்ற சந்தேக நபரான இராணுவ சிப்பாய் ஒருவர் கைது

Kanimoli
1 year ago
 ஐம்பது இலட்சம் ரூபா பெறுமதியான பேருந்தை திருடிச் சென்ற சந்தேக நபரான இராணுவ சிப்பாய் ஒருவர் கைது

கல்கெடிஹேன பிரதேசத்தில் ஹோட்டல் ஒன்றிற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஐம்பது இலட்சம் ரூபா பெறுமதியான பேருந்தை திருடிச் சென்ற சந்தேக நபரான இராணுவ சிப்பாய் ஒருவரை இன்று (29) அதிகாலை சிலர் மடக்கி பிடித்து ஒப்படைத்துள்ளதாக நிட்டம்புவ காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

கல்கெடிஹேன ஹோட்டலொன்றுக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஹோட்டல் உரிமையாளருக்குச் சொந்தமான பேருந்து நள்ளிரவு 01.00 மணியளவில் திருடப்பட்ட போது, ​​சிலர் திருடப்பட்டதாகக் கூறப்படும் நபரைப் பிடித்து ஒப்படைத்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட நபர் பெம்முல்ல கம்புருகுடா பகுதியைச் சேர்ந்த குருநாகல் போயகொட இராணுவ முகாமில் கடமையாற்றும் சிப்பாய் என விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

காவல்துறையினரடம் ஒப்படைக்கப்பட்ட போது படுகாயமடைந்த அவர் வத்துபிட்டியல ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இவர் கடந்த 27ஆம் திகதி முதல் இராணுவ முகாமில் இருந்து காணாமல் போயிருந்தமை காவல்துறையினரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பேருந்தை எதற்காக திருடினார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பேருந்தும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கம்பஹா சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் ஜகத் ரோஹன மற்றும் அத்தனகல்ல உதவி காவல்துறை மா அதிபர் பிரசாத் பெர்னாண்டோ ஆகியோரின் பணிப்புரைக்கு அமைய நிட்டம்புவ பதில் காவல் நிலைய பொறுப்பதிகாரி பிரதான காவல்துறை பரிசோதகர் சந்தன குமார தலைமையிலான காவல்துறை அதிகாரிகள் குழுவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.