இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 9.6 வீதத்தால் குறையும் : உலக வங்கி

Prathees
1 year ago
இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 9.6 வீதத்தால் குறையும் : உலக வங்கி

இந்த ஆண்டு இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 9.6 வீதத்தால் குறையும் என உலக வங்கி கணித்துள்ளது.

2023ஆம் ஆண்டில் இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மேலும் 4.2 வீதத்தால் குறையும் என உலக வங்கியின் அறிக்கையை மேற்கோள்காட்டி வெளிநாட்டு ஊடகங்கள் இன்று செய்தி வெளியிட்டுள்ளன.

ரூபாய் மதிப்பு சரிவு, பணமதிப்பிழப்பு, அந்நிய கடன் செலுத்தாதது, அந்நிய செலாவணி பற்றாக்குறை ஆகியவை இந்த நிலையை பாதித்துள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இறக்குமதியைக் கட்டுப்படுத்துவது இலங்கையின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என உலக வங்கியின் அறிக்கை கூறுகிறது.

பல குடும்பங்கள் கடும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகி வருவதாகவும் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் உலக வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

எவ்வாறாயினும், இந்த வருடத்தில் இலங்கையை விஞ்சி அதிக மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியை எதிர்பார்க்கும் நாடாக மாலைதீவு பெயரிடப்பட்டுள்ளது என்பது இந்த அறிக்கையின் மூலம் வெளிப்படுத்தப்பட்ட தனித்துவமான உண்மையாகும். இது 12.4 சதவீதமாகும்.

தெற்காசிய பிராந்தியத்தில் இலங்கை தவிர்ந்த ஏனைய நாடுகள் அனைத்தும் பொருளாதார வளர்ச்சியை வெளிப்படுத்தி வருவதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.

இதில் பங்களாதேஷ், பூடான், நேபாளம் மற்றும் பாகிஸ்தான் ஆகியவையும் அடங்கும். இருப்பினும், இந்த பட்டியலில் ஆப்கானிஸ்தான் சேர்க்கப்படவில்லை.