அதிபர் ரணில் விக்ரமசிங்க உத்தியோகபூர்வ விஜயமாக இந்தியாவிற்கு விரைவில் பயணம்

Kanimoli
1 year ago
அதிபர் ரணில் விக்ரமசிங்க உத்தியோகபூர்வ விஜயமாக  இந்தியாவிற்கு விரைவில் பயணம்

அதிபர் ரணில் விக்ரமசிங்க உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியாவிற்கு விரைவில் பயணமாகவுள்ளார்.

அதிபர் ரணில் விக்ரமசிங்க இந்தியாவிற்கு விஜயம் செய்து பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகள் பலருடன் கலந்துரையாடுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிபர் தனது இந்திய விஜயத்தின் போது இலங்கையின் பொருளாதார நெருக்கடி மற்றும் புவிசார் அரசியல் விடயங்கள் குறித்து முக்கியமாக கவனம் செலுத்துவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து பொருளாதார மீட்பிற்கான கடனுதவியை பெற உதவும் கடன் மறுசீரமைப்பு தொடர்பான கொழும்பின் திட்டங்கள் தொடர்பாக இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

அதிபர் ரணில் விக்ரமசிங்க ஏற்கனவே ஜப்பானின் ரோக்கியோவில் வைத்து பிரதமர் நரேந்தி மோடியுடன் குறுகிய நேர கலந்துரையாடலை மேற்கொண்டிருந்தார்.

இந்தியாவுடனான உறவுகளை வலுப்படுத்துவதில் ஆர்வமுள்ள அதிபர் விக்ரமசிங்க, அரச தலைவராக பதவியேற்ற பின்னர் பிரித்தானியா, ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்கு ஏற்கனவே விஜயம் செய்துள்ளார்.

அதிபர் ரணில் விக்ரமசிங்க இந்தியாவிற்கு விஜயம் செய்வதற்கு முன்னர் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த போதிலும் பல்வேறு பிரச்சினைகள் காரணமாக அது தாமதமடைந்திருந்தது.

இதேவேளை, கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அதிபர் ரணில் விக்ரமசிங்க, இலங்கையின் பொருளாதார நெருக்கடி குறித்து கலந்துரையாடுவதற்காக இந்தியாவிற்கு விஜயம் செய்யவிருப்பதையும் உறுதிப்படுத்தினார்.

இந்த ஆண்டு ஜனவரி முதல் இந்தியா இலங்கைக்கு இதுவரை ஏறத்தாழ 4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்பிலான உதவிகளை வழங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.