பெட்ரோலிய கூட்டுத்தாபனம் 90 மில்லியன் அமெரிக்க டொலர்களை இழந்துள்ளது

Kanimoli
1 year ago
 பெட்ரோலிய கூட்டுத்தாபனம் 90 மில்லியன் அமெரிக்க டொலர்களை இழந்துள்ளது

பொருத்தமற்ற செயற்பாடுகள் மூலம் பெட்ரோலிய கூட்டுத்தாபனம் 90 மில்லியன் அமெரிக்க டொலர்களை இழந்துள்ளதாக புதிய புள்ளிவிபரங்கள் தெரிவி்க்கின்றன. 

பொருத்தமற்ற கச்சா எண்ணெய் பங்குகளை கொள்வனவு செய்ததாலும், தவறான விலை முறையின் கீழ் எரிபொருள் பங்குகளை கொள்வனவு செய்ததாலும் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த மார்ச் முதல் செப்டெம்பர் வரையிலான 6 மாதங்களில் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் 90 மில்லியன் அமெரிக்க டொலர்களை இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

நட்டமடைந்த 90 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மூலம் மேலும் இரண்டு எரிபொருள் கப்பல்களை பெற்றிருக்க முடியும் என அரசாங்க தரப்பு அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.

கடந்த 6 மாதங்களில் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட கச்சா எண்ணெய் மற்றும் எரிபொருள் பங்குகள் தொடர்பில் இந்த பகுப்பாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அரசாங்கத்திற்கும் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கும் நட்டத்தை ஏற்படுத்தியமைக்காக ஒரு நிறுவனத்தை நிரந்தரமாக கறுப்புப் பட்டியலில் சேர்க்குமாறு அறிக்கை பரிந்துரைத்துள்ளது.

இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் அந்த நிறுவனத்தின் உத்தியோகபூர்வமற்ற பிரதிநிதி ஒருவரை இரகசிய சந்திப்பிற்கு அழைத்துள்ளதாகவும், வேறு வழங்குநர்கள் எவரும் அழைக்கப்படவில்லை எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த நிறுவனத்திற்கு விமான எரிபொருளை வழங்குவதற்கான முழு உரிமையையும் வழங்கியுள்ளதாகவும் ஏனைய வழங்குநர்களுக்கு விலைகளை சமர்ப்பிக்க சந்தர்ப்பம் பெட்ரோலிய கூட்டுத்தாபனம் வழங்கப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.