மகிந்த நடத்திய மாநாடு ஒரு நகைச்சுவை மன்றம் போன்றது - மைத்திரிபால சிறிசேன

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் மகிந்த ராஜபக்சவின் தலைமையில் களுத்துறையில் நடத்திய மாநாடு ஒரு நகைச்சுவை மன்றம் போன்றது என முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நேற்று (09.10.2022) மாலை கண்டி தலதா மாளிகையில் வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் சமகால அரசியல் நிலவரங்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், “இலங்கை மக்கள் தற்போது பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் தங்கள் துன்பங்களை மறக்க செயற்கையாக மேற்கொள்ளப்பட்ட ஒரு நகைச்சுவை மன்றமாகவே களுத்துறை மாநாட்டை கருத வேண்டியுள்ளது.
மற்றபடி அதில் அரசியல் ரீதியாக எந்த முக்கியத்துவமும் இல்லை.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து சிலர் அரசாங்கத்துடன் இணைந்து அமைச்சு பதவிகளை பெற்றுக் கொண்டுள்ளனர். எதிர்வரும் காலத்திலும் சிலர் அவ்வாறு இணையக்கூடும்.
ஆனாலும் அரசாங்கத்தின் நல்ல முன்னெடுப்புகளுக்கு சுதந்திர கட்சி என்றும் ஆதரவளிக்கும். சுதந்திர கட்சி முன்மொழிந்ததை போன்று சர்வகட்சி அரசாங்கமொன்று அமைக்கப்பட்டிருந்தால் தற்போதைக்கு சர்வதேச உதவிகள் கிடைக்கப்பெற்று இலங்கையின் வங்குரோத்து நிலைமையில் ஓரளவு சாதகமான மாற்றங்கள் ஏற்பட்டிருக்கும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.



