உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் ஜனாதிபதியின் கருத்து மக்களின் இறைமைக்கு விடுக்கப்பட்ட சவால்: ஐக்கிய மக்கள் சக்தி

Mayoorikka
1 year ago
உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் ஜனாதிபதியின் கருத்து மக்களின் இறைமைக்கு விடுக்கப்பட்ட சவால்: ஐக்கிய மக்கள் சக்தி

உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்த கருத்து மக்களின் இறைமைக்கு விடுக்கப்பட்ட பாரிய சவால் என்றே தாம் கருதுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் இன்று (11) வெளியிட்டுள்ள விசேட ஊடக அறிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ள அவர்,

உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைக்கும் நோக்கில் உள்ளூராட்சி சபை தேர்தலை நடத்துவதை ஒத்திவைப்பதே இதன் அடிப்படை நோக்கம் என்பது தெளிவாகிறது. உள்ளூராட்சி மன்றங்களில் உறுப்பினர் எண்ணிக்கையை அதிகரித்தது விக்கிரமசிங்கவின் சொந்த முன்மொழிவாகும். தற்போது அந்த எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என அவர் கூறுவது, உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி அல்லது தாம் தற்போது பிரதிநிதித்துவப்படுத்தும் பொதுஜன பெரமுனவின் வெளிப்படையான தோல்வியை மூடிமறைக்கும் தந்திரமே அன்றி வேறில்லை.

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கும் எந்த நடவடிக்கையும் எடுக்காத அரசாங்கம் இந்தத் தருணத்தில் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்தும் தேர்தல் ஆணைக்குழுவின் அதிகாரத்தை மிகக் கீழ்த்தரமான முறையில், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை மூலம் அபகரிக்க முயற்சிக்கப்பட்டு வருகிறது.

இது ஜனநாயக ஆட்சியில் நடக்கக் கூடாத ஒன்றாகும்.

மக்களின் அபிலாiஷகளுக்கோ அல்லது நாடு தற்போது எதிர்நோக்கி வரும் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்கோ உரிய தீர்வுகளை வழங்க தவறிய ஜனாதிபதி தலைமையிலான பொதுஜன பெரமுன, இழுத்தடிப்பின் மூலம் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தனது அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்ள முயற்சிக்கின்றது.

இந்தத் தருணத்தில் மக்களின் ஜனநாயக உரிமையான வாக்குரிமையைப் பாதுகாக்க எதிர்க்கட்சிகளின் அனைத்து சக்திகளுடனும் இணைந்து பணியாற்ற ஐக்கிய மக்கள் சக்தி உறுதிபூண்டுள்ளது என்பதை வலியுறுத்துகிறோம்.

சட்டத்திற்கு ஏற்ப அமைந்துள்ள அதிகாரங்களைப் பிரயோகித்து உடனடியாக உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றோம்.

குறுகிய நோக்கங்களை அடைந்து கொள்வதற்காக உள்ளூராட்சி சபைத் தேர்தலையோ அல்லது எந்தவொரு தேர்தலையும் ஒத்திவைக்கும் வகையில் ஜனாதிபதி செயற்பட்டால், பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் ஜனநாயக ரீதியில் அதற்கு எதிராக மேற்கொள்ளக்கூடிய ஒவ்வொரு நடவடிக்கையையும் எடுக்க தயங்க மாட்டோம் என்பதையும் வலியுறுத்துகிறோம்.