ராஜபக்ஷர்களை மீண்டும் பதவியில் அமர்த்துவதற்கு மக்கள் தயாரில்லை – எதிர்க் கட்சித் தலைவர்
நாட்டை வங்குரோத்து நிலைமைக்கு கொண்ட சென்ற ராஜபக்சர்களை மீண்டும் பதவியில் அமர்த்துவதற்கு மக்கள் தயாராக இல்லை என்று எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர்,
தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ‘பிணைமுறி திருடன்’ என்று நல்லாட்சி ஆட்சி காலத்திலிருந்தே அழைத்த ராஜபக்சர்கள், தற்போது அவருக்குப் புகழ் பாடிவருகின்றனர்.
ஊழல், மோசடிகளை மூடி மறைத்து ராஜபகஷர்கள் தலைமையிலான மொட்டு அமைச்சர்களை புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாதுகாத்து வருவதன் காரணமாகவே, ராஜபக்ஷர்கள் அவருடன் இணைந்து அவருக்கு புகழ்பாடி வருகின்றனர்.
களுத்தறையில் ஒன்றிணைந்து எழுவோம் என்று கூச்சலிட்டு மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் ராஜபக்சர்களின் முயற்சிகள் தோற்கடிக்கப்பட வேண்டும்.
எமது நாட்டை அழித்து நாட்டை வங்குரோத்து அடைய செய்து எமது நாட்டை பிச்சைக்கார நாடாக மாற்றிய ராஜபக்ச கும்பல், ஒன்றிணைந்து எழுவதற்கு மற்றுமொரு சந்தர்ப்பம் வழங்கப்படக்கூடாது.
அவ்வாறு நடந்தால் நாடு மீண்டும் அழிவிலிருந்து அழிவை நோக்கி செல்வதைத் தடுக்க முடியாது.
முடிந்தால் தேர்தலை நடத்தி மக்களின் முடிவைப் பார்க்குமாறு ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்திடம் கோருகின்றோம்.
அவ்வாறே, மக்கள்படும் துன்பங்களை உணர்ந்து, அந்த மக்களின் பிரச்சினைகளுக்கு பதில் சொல்லும் தற்போதுள்ள ஒரே மாற்று அணி ஐக்கிய மக்கள் சக்தி என்பதால் தேர்தலை நடத்தி மக்கள் அபிப்பிராயத்தைப் பார்க்குமாறு கோரிக்கை விடுக்கின்றோம்.
நாட்டையும் மக்களையும் அழித்து வங்குரோத்தடையச் செய்த மொட்டு, மீண்டும் ஒன்றிணைந்து களுத்துறையிலிருந்து எழுவோம் என்ற பிரசாரத்தை முன்னெடுத்து வருகின்றது.
நாட்டை அழித்து கருவிலிருக்கும் சிசு, கர்ப்பிணிகள், குழந்தைகள், பெரியோர் என சகல தரப்பினரையும் பாதிப்படைய செய்தவர்கள் ராஜபக்ஷவினர்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான தற்போதைய அரசாங்கம், மக்களுக்கு பயந்து புதிய சட்டங்களை கொண்டு வருகின்றது.
அந்தச் சட்டங்கள் ஊடாக புனர்வாழ்வுப் பணியகத்தை நிறுவி, அதன்மூலம் போராடிய இளைஞர்களை சிறையில் அடைத்து, அரச மிலேச்சத்தனத்தால் அடக்கி ஒடுக்க முயல்கின்றனர்.