பணம் செலுத்தும் வார்டுகளை அறிமுகப்படுத்துவது குறித்து சுகாதார அமைச்சு பரிசீலனை
தற்போதைய பொருளாதார நெருக்கடி மற்றும் செலவினக் குறைப்புகளுக்கு மத்தியில் சுகாதார சேவையை நிலைநிறுத்தும் நோக்கத்துடன் அரசுக்கு சொந்தமான மருத்துவமனைகளில் அதிக கட்டணம் செலுத்தும் வார்டுகளை அறிமுகப்படுத்துவது குறித்து சுகாதார அமைச்சு பரிசீலித்து வருகிறது.
இந்த விடயம் குறித்து தெரிவித்துள்ள சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, 30 சதவீத பணம் செலுத்தும் வார்டுகளை அறிமுகப்படுத்துவது குறித்து சுகாதார அமைச்சு பரிசீலித்து வருவதாக தெரிவித்தார்.
இது செலவை மீட்டெடுப்பதற்கு மட்டுமல்ல, தனியார் துறையைவிட எங்களால் சிறந்த சேவையை வழங்க முடியும் என்றும் ஒரு அறையுடன் சிறந்த சேவையை மக்கள் பார்த்தால், அவர்கள் கட்டண வார்டுகளுக்குச் செல்வார்கள் என்றும் அவர் கூறினார்.
அரச வைத்தியசாலைகளில் தனியான ஷிப்ட் அடிப்படையிலான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருவதாகத் தெரிவித்த அமைச்சர், இலவச மற்றும் கட்டண வார்டுகளுக்கு இது நடைமுறைப்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.
பணம் செலுத்தும் வார்டு முறையானது சத்திரசிகிச்சைகளுக்காக காத்திருக்கும் வரிசையை 2 வருடங்களுக்குப் பதிலாக ஆறு மாதங்களாக குறைக்கும் என சுட்டிக்காட்டிய சுகாதார அமைச்சர், உத்தேச பணம் செலுத்தும் வார்டு முறைமை இன்னும் அமைச்சரவைக்கு முன்மொழியப்படவில்லை என்றும் கூறினார்.
கொழும்பு தேசிய மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலைகளில் கட்டணம் செலுத்தும் வார்டுகளை அறிமுகப்படுத்துவதற்கான யோசனை ஏற்கனவே நடைமுறையில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.