இலங்கை இன்னும் நடுத்தர வருமானம் கொண்ட நாடு: சர்வதேச நாணய நிதியம்
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ள போதிலும், சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கை நடுத்தர வருமானம் கொண்ட நாடாகக் கருதப்படுவதாக நிதியத்தின் ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் பிரதிப் பணிப்பாளர் ஆன் மேரி தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் வருடாந்த மாநாட்டுடன் இணைந்து அமெரிக்காவின் வாஷிங்டனில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
“இலங்கை தற்போது மிகவும் கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.
இலங்கையின் தற்போதைய நிலைமை குறித்து அவதானம் செலுத்தி வருகிறோம்.
வறுமை போன்ற பாதிக்கப்படக்கூடிய மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு முடிவுகட்ட விரைவாக செயல்பட முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்.
செப்டெம்பர் முதலாம் திகதி முதல் 4 வருட காலத்திற்கு இலங்கைக்கு நீட்டிக்கப்பட்ட கடன் வசதியை வழங்குவதற்கு ஊழியர்கள் உடன்படிக்கைக்கு வந்துள்ளனர்.
ஆனால் இந்த வசதியின் கீழ் நிதி வழங்குவது சர்வதேச நாணய நிதியத்தின் இயக்குநர்கள் குழுவின் விவாதங்களுக்குப் பிறகு தொடங்கும்.
மேலும் இந்த வசதி பல்வேறு நிபந்தனைகளில் வழங்கப்படுகிறது.
அவற்றில் சில ஏற்கனவே இலங்கை அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
ஆனால் நாட்டின் கடன் நெருக்கடிக்கு தீர்வை வழங்குவதே முக்கியமானது. தற்போது, இலங்கையின் கடன் நிலை உறுதியற்ற தன்மையைக் காட்டுகிறது.
தரவரிசையைப் பொறுத்தவரை, இலங்கை இன்னும் நடுத்தர வருமானம் கொண்ட நாடு என்று நான் சொல்ல வேண்டும். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சரிவு ஏற்பட்டாலும், இலங்கையை நடுத்தர வருமானம் கொண்ட நாடாக நாங்கள் கருதுகிறோம். மேலும், நீட்டிக்கப்பட்ட கடன் வசதி என்பது பொதுவானது. சர்வதேச நாணய நிதியத்தின் வசதி, இது ஒரு சலுகைத் திட்டம் அல்ல எனத் தெரிவித்தார்.