இன்றைய வேத வசனம் 18.10.2022:நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.
இயேசு இந்த உலகத்திலே வாழ்ந்த நாட்களிலே, தம்மிடத்தில் விடுதலையடையும்படியாய் வந்த யாவரையும் குணமாக்கி அவர்கள் வாழ்வில் ஒரு விடியலை உண்டு பண்ணினார்.
சப்பாணிகள், குருடர், ஊமையர், ஊனர் போன்றவர்களை மாத்திரமல்ல, வாழ்க்கையில் சிறுமைப்பட்டு ஒடுக்கப்பட்டு மனநோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் ஆறுதல் கொடுத்தார்.
வருத்தப்பட்டு பாரம் சுமப்பவர்களே நீங்கள் எல்லோரும் என்னண்டை வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன் என்னும் ஜீவ வார்த்தை அன்று மட்டுமல்ல, இன்றும் மாறாததாக இருக்கின்றது.
இன்றும் நாம் இயேசு அண்டைக்கு வரும் போது, அவர்தாமே, இந்த உலகம் தரமுடியாத சமாதானத்தை உள்ளத்திலே கொடுத்து, மன ஆறுதலை தருகின்றவராய் இருக்கின்றார்.
“இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான்” என்ற வசனத்தின்படி, பிதாவாகிய தேவனின் வலது பாரிசத்திலே இருந்து நமக்காக வேண்டுதல் செய்து கொண்டிருக்கும் இயேசு நம்முடைய உள்ளத்தில் வாசம் செய்ய விரும்புகின்றார்.
அவர் வாசம் செய்யும் உள்ளத்தில் குழப்பங்களுக்கு இடமில்லை. எனவே, அவர் உங்கள் உள்ளத்தில் வாசம் செய்யும்படி அவருக்கு இடங்கொடுங்கள். அவரை ஏற்றுக் கொள்ளுங்கள்.
அவருடைய வார்த்தைகளை வாசித்து, இருதயத்திலே பதியவைத்து, தியானித்து கைகொண்டு வருகின்றவர்கள், அவருக்கு இடங்கொடுக்கின்றார்கள்.
அவரோடு தினமும் ஜெபத்திலே இடைப்படுகின்றவர்கள், அவர் அவர்கள் உள்ளத்திலே வாசம் செய்கின்றார் என்பதை உணர்ந்து கொள்ளுகின்றார்கள்.
நண்பர்களே, தேவனுடைய ஜீவவார்த்தைகளை தினமும் வாசியுங்கள், தியானியுங்கள், கைக்கொள்ளுங்கள். நாள்தோறும் ஜெபத்திலே அவருடன் இடைப்படுங்கள், அதன் வழியாக இயேசு அண்டை சேருங்கள், அவர் உங்களுக்கு இளைப்பாறுதலை தருவார். ஆமென்!
வருத்தப்பட்டுப் பாரஞ்சு மக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். (#மத்தேயு 11:28)