காணாமல் போன ஆறு கடற்படை வீரர்கள் அயல் நாடுகளிடம் உதவி கோரல்
தென்பகுதி கடற்பரப்பில் நடவடிக்கையில் ஈடுபட்டு காணாமல் போன ஆறு கடற்படை வீரர்கள் மற்றும் படகை தேடும் பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாகவும், இதற்காக வெளிநாடுகளின் உதவியும் பெறப்பட்டுள்ளதாக சிறிலங்கா கடற்படை தலைமையகம் தெரிவித்துள்ளது.
ஆறு பேரைக் கொண்ட இந்தக் கடற்படைக் குழு கடந்த மாதம் 16ஆம் திகதி தென் பகுதி கடல் கரையோரப் பகுதிக்கு நடவடிக்கைக்காகச் சென்றதாகவும், கடந்த 17ஆம் திகதி முதல் அவர்களது தொடர்புகள் துண்டிக்கப்பட்டதாகவும் கடற்படை ஊடகப் பேச்சாளர் கப்டன் இந்திக சில்வா தெரிவித்தார்.
காணாமற்போன வீரர்களையும் படகையும் கண்டுபிடிக்கும் நோக்கில் கடற்படையினர் இந்த நாட்டுக்கு சொந்தமான கடற்பரப்புகளில் தொடர்ச்சியாக தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், இந்தியா, மாலைதீவுகள், இந்தோனேசியா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் இருந்து சம்பந்தப்பட்ட கடற்பரப்புகளை தேடுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
குறித்த படகுடனான தொடர்பாடல் முறிந்து நேற்றுடன் ஒரு மாதமாகியிருந்த நிலையில், தெற்குக் கரையோரப் பகுதியில் சந்தேகத்திற்கிடமான கப்பல்களை சோதனையிடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டவர்களே இந்த வீரர்கள் ஆவர்.
போதைப்பொருள் நாட்டிற்குள் கொண்டு வரப்படும் கடல் பிராந்தியமாக தெற்கு கடல் பகுதி குறிப்பிடப்பட்டுள்ளது, இதன் காரணமாக சட்டவிரோத பொருட்கள் நாட்டிற்கு கொண்டு வரப்படுவதைத் தடுக்க கடற்படையினர் தொடர்ந்து சம்பந்தப்பட்ட கடல் பிராந்தியத்தில் உள்ள கப்பல்களை சோதனை செய்கின்றனர்.