இங்கிலாந்து பொருளாதாரத்தை மீட்க முழு முயற்சி எடுப்பேன் - முதல் உரையில் ரிஷி சுனக் உறுதி
பிரிட்டன் பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ள ரிஷி சுனக் இன்று மன்னர் மூன்றாம் சார்லசை சந்தித்தார். அப்போது அவரை பிரதமராக நியமனம் செய்து, புதிய அரசை அமைக்கும்படி கேட்டுக் கொண்டார்.
புதிய பிரதமராக தேர்வான ரிஷி சுனக்குக்கு உலக தலைவர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பிரதமர் ரிஷி சுனக் நாட்டு மக்களுக்கு முதல் முறையாக உரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது: இங்கிலாந்து பொருளாதாரத்தை மீட்க முழு முயற்சி எடுப்பேன். எனது செயல்களால் நாட்டைப் பெருமைப்படுத்துவேன்.
கடினமான முடிவுகள் வர உள்ளன. இரவு பகல் பாராமல் உழைப்பேன். எனது நடவடிக்கைகள் மூலம் நாட்டை ஒருங்கிணைப்பேன். எனது பணி மூலம் மக்களின் நம்பிக்கையை பெறுவேன்.
கொரோனா சமயத்தில் மக்கள் மற்றும் வணிகங்களைப் பாதுகாக்க என்னால் முடிந்த அனைத்தையும் செய்வதைப் பார்த்தீர்கள்.
நான் வழிநடத்தும் அரசாங்கம் அடுத்த தலைமுறையினரையும், உங்கள் பிள்ளைகளையும், பேரக்குழந்தைகளையும் கடனாகச் செலுத்திவிடாது.
பிரதமர் பதவிக்கான பொறுப்பு கடமைகளை உணர்ந்து கன்சர்வேடிவ் கட்சியின் முக்கிய கோட்பாடுகளைச் செயல்படுத்துவேன் என தெரிவித்தார்.