ஜனாதிபதி மாளிகை அருகே துப்பாக்கியுடன் வந்த பெண்- இந்தோனேசியாவில் திடீர் பரபரப்பு
இந்தோனேசியாவின் ஜகார்த்தா நகரில் ஜனாதிபதி மாளிகை அருகே துப்பாக்கியுடன் சென்ற பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது. உள்ளூர் நேரப்படி இன்று காலை 7 மணியளவில் அந்தப் பெண் ஜனாதிபதி மாளிகையின் காம்பவுண்ட் அருகே வந்தபோது அவரை அதிகாரிகள் சந்தேகத்தின்பேரில் கைது செய்தனர்.
அந்த பெண் ஜனாதிபதி மாளிகையில் நுழையவில்லை என்றும், அவர் துப்பாக்கியுடன் வந்தபோது ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி ஜோகோ விடோடோ இல்லை என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த பெண்ணுக்கு துப்பாக்கி எப்படி கிடைத்தது? அவரது நோக்கம் என்ன? என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உலகின் மிகப்பெரிய முஸ்லீம் பெரும்பான்மை நாடான இந்தோனேசியாவில், சில சமயங்களில் அரசு அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு படைகளை குறிவைத்து பயங்கரவாத தாக்குதல்கள் நடக்கின்றன.
கடந்த ஆண்டு ஜகார்த்தாவில் உள்ள போலீஸ் தலைமையகத்தில் அதிகாரிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய பெண் ஒருவரை போலீசார் சுட்டுக் கொன்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.