இன்றைய வேத வசனம் 28.10.2022: நம்முடைய இரட்சகராகிய தேவனுடைய உபதேசத்தை எல்லாவற்றிலும் அலங்கரிக்கத்தக்கதாக
நம்முடைய இரட்சகராகிய தேவனுடைய உபதேசத்தை எல்லாவற்றிலும் அலங்கரிக்கத்தக்கதாக... புத்திசொல்லு. தீத்து 2:10
நெல்சன், 1916ஆம் ஆண்டு அமெரிக்காவில் மருத்துவ பட்டம் பெற்றார். அந்த ஆண்டின் இறுதியில், அவரும் திருமணமாகி ஆறுமாதமான அவருடைய மனைவியும் சீனாவுக்கு வந்து சேர்ந்தனர்.
தன்னுடைய 22 வயதில் அந்த மருத்துவமனைக்கு மருத்துவராகப் பொறுப்பேற்றார். இரண்டு மில்லியன் மக்கள் வாழும் அந்த பகுதியில் இருக்கும் ஒரே மருத்துவமனை இது.
24 ஆண்டுகள் அந்த பகுதியில் குடும்பத்தோடு தங்கியிருந்து, மருத்துவமனையையும் நடத்திக்கொண்டு, அறுவை சிகிச்சைகளையும் மேற்கொண்டு, ஆயிரக்கணக்கான மக்களுக்குச் சுவிசேஷத்தையும் நெல்சன் பகிர்ந்தார்.
ஆரம்பத்தில் “அந்நிய சத்துரு” என்று மக்கள் தங்கள் நம்பிக்கையில்லாமையை வெளிப்படுத்தினாலும், பின் நாட்களில், “சீன தேசத்து மக்களை நேசிக்கும் நெல்சன்” என்று அவரை அன்போடு அழைத்தனர்.
அவருடைய மகளான ரூத், சுவிசேஷகரான பில்லி கிரகாமை மணந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நெல்சன் திறமையான மருத்துவராகவும் நேர்த்தியான வேதாகம ஆசிரியராகவும் இருந்தாலும்; அவருடைய திறமை அல்ல, அவருடைய சுபாவங்களே மற்றவர்களைத் தேவனுக்கு நேராய் நடத்திற்று.
கிரேத்தா தீவிலிருக்கும் திருச்சபைக்குப் பொறுப்பாயிருந்த தீத்து என்னும் புறஜாதி ஊழியனுக்கு பவுல் நிருபம் எழுதியபோது, கிறிஸ்துவைப்போல் வாழ்வது முக்கியமானது; ஏனெனில் அதுவே சுவிசேஷத்திற்கு அலங்காரம் என்று அறிவுறுத்துகிறார் (தீத்து 2:10). ஆகிலும் அதை நாம் நம்முடைய சுயபெலத்தோடே செய்ய முடியாது. கர்த்தருடைய கிருபையானது நம்மை “தெளிந்த புத்தியும் நீதியும் தேவபக்தியும் உள்ளவர்களாய்” மாற்றி (வச.12), ஆரோக்கியமான உபதேசத்துக்கு (வச.1) பாத்திரர்களாய் நம்மை உருவாக்கும்.
நம்மை சுற்றியுள்ள அநேகருக்கு கிறிஸ்துவின் நற்செய்தி தெரியாது. ஆனால் அவர்களுக்கு நம்மை தெரியும். அவருடைய நற்செய்தியை அலங்கரிக்கப்பட்ட விதத்தில் வெளிப்படுத்துவதற்குத் தேவன் நமக்கு உதவிசெய்வாராக.