அமெரிக்காவில் மகிழுந்து ஒன்று விபத்துக்குள்ளாகியதில்இந்தியாவைச் சேர்ந்த 3 மாணவர்கள் பலி
அமெரிக்காவின் மேற்கு மாசசூசெட்ஸ் பகுதியில் மகிழுந்து ஒன்று விபத்துக்குள்ளாகியதில் இந்தியாவைச் சேர்ந்த மூன்று மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
பிரேம் குமார் ரெட்டி கோடா (27), பவானி குல்லப்பள்ளி (22) மற்றும் சாய் நரசிம்ம படம்செட்டி (22), ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பெர்க்ஷயர் மாவட்ட அதிகாரிகள் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
இரண்டு வாகனங்கள் எதிரெதிரே மோதியதில் ஏற்பட்ட பயங்கர விபத்தில் மூன்று மாணவர்கள் உயிரிழந்ததாகவும், மேலும் ஐந்து பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகாலை 5.30 மணியளவில் வடக்கு நோக்கிச் சென்ற மகிழுந்தும், தெற்கு நோக்கிச் சென்ற வாகனமும் மோதிக்கொண்டன.
மகிழுந்தில் இருந்தவர்கள் சர்வதேச கல்லூரி மாணவர்கள் என்றும், ஆறு பேர் நியூ ஹேவன் பல்கலைக்கழகத்திலும், ஒருவர் சேக்ரட் ஹார்ட் பல்கலைக்கழகத்திலும் படித்தவர்கள் என்றும் அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர்.
மற்ற வாகனத்தில் இருந்த 46 வயதான அர்மாண்டோ பாட்டிஸ்டா-குரூஸ் சிகிச்சைக்காக ஃபேர்வியூ மருத்துவ மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டார்.
விபத்து குறித்து மாசசூசெட்ஸ் மாநிலம் மற்றும் உள்ளூர் காவல்துறை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.