புத்தசாசனத்துக்கு எதிராக செயற்படும் அனைவரும் சபிக்கப்படுவார்கள் : குருந்தூர் மலை பௌத்த விகாரை தேரர்
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள குருந்தூர் மலையானது இந்து கோவில் என குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என தேசிய பாரம்பரியத்தை பாதுகாப்பதற்கான அமைப்புக்களின் கூட்டமைப்பின் தலைவர் மெதகொட தம்மானந்த தேரர் தெரிவித்தார்.
பெபிலியான சுனேத்ரா தேவி மஹா பிரிவெனா விகாரையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.
குருந்தூர் மலையானது இந்து கோவில் என குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. குருந்தூர் மலையானது பௌத்த விகாரை என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் ஆதலால் புத்த சாசனத்தின் அடையாளங்களை அழிக்க ஒருபோதும் இடமளிக்க முடியாது என மெதகொட தம்மானந்த தேரர் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஒரு சில அரசியல்வாதிகள் குருந்தூர் மலை விவகாரத்தின் உண்மையை அறிந்துக்கொண்டு அரசியல் நோக்கத்துக்காக அமைதி காத்து செயற்பட்டு வருகிறார்கள். புத்தசாசனத்துக்கு எதிராக செயற்படுபவர்கள் அனைவரும் சபிக்கப்படுவார்கள்.
குருந்தூர் மலையில் 100-103 வரையிலான காலப்பகுதிக்குள் பௌத்த விகாரை நிர்மாணிக்கப்பட்டதாகவும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பௌத்த தொல்பொருள் அம்சங்கள் அடங்கிய விகாரைகள் நிர்மாணிக்கப்பட்டதாகவும் மகாவசம்சத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் பௌத்த மத அடையாளத்தை பிரதிபலிக்கும் சின்னங்கள் குருந்தூர் மலையில் காணப்படுவதாக தொல்பொருள் ஆய்வு சான்றுகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.
குருந்தூர் மலை விகாரை இந்து கோயில் என்று குறிப்பிடுவதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. விகாரையின் நிர்மாண பணிகளுக்கு தமிழ் அடிப்படைவாதிகள் எதிர்ப்பு தெரிவிப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
புலம் பெயர் தமிழ் அமைப்புக்களின் கட்டளைக்கு அமையவே தமிழ் அரசியல்வாதிகள் செயற்படுகிறார்கள். மேலும், புத்தசாசன அமைச்சர் மற்றும் தொல்பொருள் திணைக்கள் பணிப்பாளர் நாயகத்தில் செயற்பாடுகள் கண்டிக்கத்தக்கது எனவும் குருந்தூர் மலையில் புத்தசாசனத்துக்கு பாதிப்பை ஏற்படுத்த ஒருபோதும் இடமளிக்க முடியாது எனவும் அவ்வாறு ஏற்படின் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்துவோம் என்றும் தெரிவித்திருந்தார்.