மருந்து கலவையாளர் இன்மையால் மக்கள் சிரமம்
முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பிரதேச வைத்தியசாலையில் சுமார் ஒரு மாத காலமாக மருந்து கலவையாளர் இல்லாமையால் மக்கள் பல்வேறு சிரமங்களுக்கு முகம்கொடுத்துள்ளனர்.
நோய்க்காக சிகிச்சை பெற வரும் மக்கள் மருந்தினை பெற்றுக் கொள்ள முடியாமல் திரும்பி செல்லும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
வைத்தியசாலைகளுக்கு செல்லும் மக்களின் அவலம்
ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பல நூற்றுக்கணக்கான மக்கள் நாளாந்தம் ஒட்டுசுட்டான் பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைக்காக வருகின்றனர்.
முத்துஐயன்கட்டு உள்ளிட்ட தூர இடங்களில் இருந்தும் முச்சக்கரவண்டிகளுக்கு அதிக பணம் செலுத்தி வைத்தியசாலைக்கு வரும் போதும் மருந்துகளை பெற்றுக் கொள்ள முடியாது பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுப்பதாக மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
வைத்தியசாலைக்கு வருகைதந்த பல நோயாளர்கள் மருந்துகளை பெற்றுக் கொள்ள முடியவில்லை எனவும் இதனால் தாம் பல்வேறு இன்னல்களுக்கு முகம்கொடுப்பதாகவும் எனவே தமக்கான தீர்வினை உடனடியாக பெற்றுத்தருமாறு ஊடகங்கள் ஊடாக கோரிக்கை விடுத்துள்ளனர்.
மருந்து கலவையாளர்கள் இல்லாமையால் பாதிக்கப்படும் மக்கள்
இந்த விடயம் தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் மு.உமாசங்கரை தொடர்பு கொண்டு நாம் வினவியபோது,
முல்லைத்தீவு மாவட்டத்தில் 33 மருந்து கலவையாளர்கள் இருக்க வேண்டிய நிலையில் 21 பேர் மாத்திரமே இருக்கின்றனர். அதிலும் நான்கு பேர் விடுமுறையில் உள்ளமையினால் 17 பேர் மாத்திரமே கடமையில் உள்ளனர்.
மூன்று வைத்தியசாலைகள் நிரந்தமாகவே மருந்து கலவையாளர் இல்லாமலேயே சேவை வழங்குகிறது. ஒட்டுசுட்டான் பிரதேச வைத்தியசாலையில் சேவையில் இருந்த மருந்து கலவையாளர் நீண்ட காலம் விடுமுறையில் உள்ளார்.
மாற்றீடு செய்யக்கூடிய அளவில் மருந்து கலவையாளர்கள் இல்லாமையினால் மாவட்ட வைத்தியசாலை மாவட்ட மருந்து வழங்கல் பிரிவு மற்றும் மூன்று ஆதார வைத்தியசாலை உள்ளடங்கலாக மாவட்டத்தில் உள்ள வைத்தியசாலைகளை இயக்க வேண்டிய நிலை காணப்படுகிறது. இதனாலேயே இவ்வாறான நிலை காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், இதற்கான உரிய தீர்வினை பெற்றுத் தருமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர்.