நாட்டின் பல பகுதிகளில் மீண்டும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக மக்கள் விசனம்

Kanimoli
1 year ago
நாட்டின் பல பகுதிகளில் மீண்டும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக மக்கள் விசனம்

நாட்டின் பல பகுதிகளில் மீண்டும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் லிட்ரோ தலைவர் முதித பெரேஸ் கூறுகையில், எரிவாயு விலை குறைக்கப்படும் என்ற அறிவிப்பைத் தொடர்ந்து, சில விநியோகஸ்தர்களும் சரக்கு சேகரிப்பாளர்களும் எரிவாயுவை கொள்வனவு செய்யத் தயங்குவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

எரிவாயுத் திருத்தம் குறித்த மற்றுமொரு அறிவிப்பு, நாளைய தினம் (29.10.2022) வெளியிடப்படும் என்றும் உலக சந்தை நிலவரம் கடந்த மாதத்தைப் போலவே உள்ளதால், அதைக் கொண்டு தற்போதைக்கு விலைகளை கணிக்க முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்த நிலையில், தற்போதைய விலையில் எரிவாயுவை கொள்வனவு செய்யும் போது எதிர்வரும் வாரத்தில் எரிவாயு விலையை குறைத்தால் பாதகமாக அமையும் என கருதி விநியோகஸ்தர்கள் எரிவாயுவை சந்தைக்கு வெளியிடுவதில் தாமதிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, எரிவாயு நிறுவனமும் விநியோகத்தை குறைத்ததால் தட்டுப்பாடு நிலைமை ஏற்பட்டுள்ளதாக விநியோகஸ்தர்கள் கூறுகின்ற போதும், எரிவாயு விநியோகம் குறைக்கப்படவில்லை என சம்பந்தப்பட்ட நிறுவனம் தெரிவித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

இவ்வாறானதொரு நிலையில் எரிவாயு தட்டுப்பாடு தொடர்பான கள நிலவரத்தை இன்று எமது செய்திப்பிரிவு ஆராய்ந்தது.

அப்போது மக்கள் கூறுகையில், எரிவாயு கையிருப்பு இருந்தாலும் கூட அதனை விநியோகஸ்தர்கள் பதுக்கும் நிலைமை காணப்படுகிறது. இதன்மூலம் போலியான தட்டுப்பாட்டு நிலைமை ஒன்றை ஏற்படுத்தி அதிகளவு பணத்திற்கு எரிவாயுவினை விற்பனை செய்யும் கள்ளச் சந்தை முறைமையொன்றும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளனர்.