மாணவனை துப்பாக்கியால் சுட்ட பொலிஸ் உத்தியோகத்தர் இன்று நீதிமன்றில் முன்னிலையாகவுள்ளார்

Prathees
1 year ago
 மாணவனை துப்பாக்கியால் சுட்ட  பொலிஸ் உத்தியோகத்தர் இன்று நீதிமன்றில் முன்னிலையாகவுள்ளார்

மாத்தறை திஹகொட பிரதேசத்தில் பாடசாலை மாணவர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள உப பொலிஸ் பரிசோதகர் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 
நேற்று பிற்பகல் பாடசாலை மாணவர்கள் சிலர் முச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்த போது, ​​திஹாகொட பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவொன்று அதனை நிறுத்தி சோதனையிட சென்றதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

காயமடைந்த 15 வயதுடைய பாடசாலை மாணவர் தற்போது கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பொலிஸ் குழுவிற்கு பொறுப்பாக இருந்த 57 வயதான உப பொலிஸ் பரிசோதகர் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
 
இச்சம்பவம் தொடர்பாக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹனவின் ஆலோசனையின் பேரில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
 
பாடசாலை மாணவன் சுடப்பட்டதையடுத்து, பிரதேசவாசிகள் குழுவொன்று திஹாகொட பொலிஸ் நிலையத்திற்கு அருகில் வந்ததையடுத்து அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.