பண்டிகைக் காலத்தில் அத்தியாவசிய உணவுப் பொருட்களை தட்டுப்பாடு இன்றி சலுகை விலையில் வழங்குவது தொடர்பில் கவனம் செலுத்த முடிவு

Kanimoli
1 year ago
பண்டிகைக் காலத்தில் அத்தியாவசிய உணவுப் பொருட்களை தட்டுப்பாடு இன்றி சலுகை விலையில் வழங்குவது தொடர்பில் கவனம் செலுத்த முடிவு

எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் நுகர்வோருக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களை தட்டுப்பாடு இன்றி சலுகை விலையில் வழங்குவது தொடர்பில் கவனம் செலுப்பட்டுள்ளது.

இது தொடர்பான கலந்துரையாடல் வர்த்தகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சில் நேற்றைய தினம் (28.10.2022) நடைபெற்றுள்ளது.

இதன்போது வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ கூறுகையில், இந்திய கடன் திட்டத்தின் ஊடாக அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்ததன் மூலமும் அத்தியாவசியப் பொருட்களின் இறக்குமதியை திறந்த கணக்கு முறையின் ஊடாக நிர்வகிப்பதன் மூலமும் நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.

எதிர்வரும் பண்டிகைக்காலத்தில் சந்தையில் அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாத வகையில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை மேலும் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளார். 

நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் அளவு மற்றும் விலை அதிகரிப்பு குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

மேலும், எதிர்வரும் சில மாதங்களுக்கு அரிசி, சீனி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களை எதிர்பார்த்த அளவு தட்டுப்பாடு இன்றி வழங்க முடியும் என இறக்குமதியாளர்கள் சங்கப் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலைகளில் திடீரென மாற்றம் ஏற்பட்டுள்ளது.

அதன்படி கொழும்பு புறக்கோட்டை மொத்த சந்தையில் பருப்பு, வெள்ளை சீனி உள்ளிட்ட பல பொருட்களின் விலைகள் மேலும் குறைந்துள்ளன.

கடந்த சில நாட்களுக்கு முன் 375 ரூபாவாக இருந்த ஒரு கிலோகிராம் பருப்பின் விலை 350 ரூபாவாக குறைந்துள்ளது.

அத்துடன் 290 ரூபாவாக இருந்த ஒரு கிலோகிராம் வெள்ளைச் சீனியின் மொத்த விலை 225 ரூபாவாக குறைந்துள்ளது.

இந்த விடயத்தை அத்தியாவசிய இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை கோதுமை மா ஒரு கிலோகிராமின் மொத்த விற்பனை விலை 250 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாக நேற்றைய தினம் தகவல்கள் வெளியாகியிருந்தனர்.

எனினும் தற்போதும் புறக்கோட்டையில் கோதுமை ஒரு கிலோகிராம் 250 ரூபா முதல் 260 ரூபா வரை விற்பனை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புறக்கோட்டை அத்தியாவசிய உணவு பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் இதனை அறிவித்துள்ளது.