இன்றைய வேத வசனம் 02.11.2022: எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்.
வெவ்வேறு இடங்களைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் சென்னை பட்டணத்தைச் சுற்றிப்பார்க்கும்படி வந்தார்கள். தற்செயலாக சந்தித்துக்கொண்ட இருவரும் ஒரு விடுதிக்குச் சென்றார்கள். இருவருக்கும் சேர்ந்து ஒரு அறை கொடுக்கப்பட்டது.
இரவு படுக்கைக்குச் செல்லும் நேரம் வந்தது. இருவருமே மற்ற இளைஞனுக்கு முன்னால் முழங்காற்படியிட்டு ஜெபிக்க வெட்கப்பட்டார்கள். ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டு வெறுமனே உட்கார்ந்து கொண்டிருந்தார்கள்.
அவர்கள் இருவருமே கோழைகள் என்றுதான் நான் சொல்லுவேன்!
இறுதியாக ஒருவன் தான் ஏதோ தவறான காரியத்தைச் செய்யப் போவதுபோலத் தயங்கியபடியே முழங்காற்படியிட்டு ஜெபிக்கத் துவங்கினான். இதைக் கண்டவுடன் இரண்டாவது இளைஞனும் முழங்காற்படியிட்டான்.
ஜெபித்து முடித்து எழுந்தவுடன் ஒருவன் மற்றவனைப் பார்த்து, "நல்லவேளை, நீ முழங்காற்படியிட்டாய். நான் உன்னைப் பார்த்துப் பயந்துகொண்டிருந்தேன்-" என்று கூறினான். "நானும் உன்னைப் பார்த்துப் பயந்துகொண்டிருந்தேன்-" என்று மற்றவனும் ஒப்புக்கொண்டான்!
இருவரும் கிறிஸ்தவர்களாக இருந்தபோதிலும், மற்றவனுக்கு முன்னால் கிறிஸ்துவை அறிக்கையிடத் தயங்கியிருக்கிறார்கள்! இதைப் பார்த்து உங்களுக்குச் சிரிப்பு வரலாம். ஆனால் நாம் எல்லோருமே ஏதேனும் ஒரு வேளையில் நாம் யார் என்பதை வெளிப்படுத்தத் தயங்குகிறோம் அல்லவா?
எல்லா நாமத்துக்கும் மேலான நாமத்தைக் கொண்டவரை நாம் ஏற்றுக்கொண்டிருக்கிறோம். அவருடைய நாமத்தை அறிக்கையிடத் தயங்கலாமா?
பிதாவாகிய அவருக்கு மகிமையாக இயேசுகிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார். (#பிலிப்பியர் 2:11).
ஆமென்!!! அல்லேலூயா!!!