பிரித்தானியாவில் தொடரும் அகதிகள் மற்றும் குடியேறிகளின் வருகை – ரிஷி சுனக்கிற்கு தொடரும் நெருக்கடி!

#world_news
Nila
1 year ago
பிரித்தானியாவில் தொடரும்  அகதிகள் மற்றும் குடியேறிகளின் வருகை – ரிஷி சுனக்கிற்கு தொடரும் நெருக்கடி!

பிரித்தானியாவில் அகதித் தஞ்சம் கோருவதற்குரிய கட்டமைப்பு முற்றாக சீர்குலைந்து சட்டவிரோத குடியேற்றம் கட்டுப்பாடு அற்று செல்வதாகவும் அகதிகள் மற்றும் குடியேறிகளின் வருகை ஒரு ஆக்கிரமிப் படையெடுப்பு எனவும் உள்துறை அமைச்சர் சுயெல்லா பிரேவர்மேன் கூறியுள்ளமை புதிய கண்டனங்களை எழுப்பியுள்ளது.

பிரித்தானியாவில், ரிஷி சுனக்கின் புதிய அரசாங்கத்தில் உள்துறை அமைச்சரும் சுயெல்லா பிரேவர்மேன் சர்ச்சைக்குரியவராக நோக்கப்படும் தன்மை வலுத்து வருகின்றது.

அந்த வகையில் பிரித்தானியாவில் அகதி தஞ்சம் கோருவதற்குரிய கட்டமைப்பு முற்றாக சீர்குலைந்து சட்டவிரோத குடியேற்றம் கட்டுப்பாடு அற்று செல்வதாக அவர் குறிப்பிட்ட விடயமும் அகதிகள் மற்றும் குடியேறிகளின் வருகையை ஒரு ஆக்கிரமிப்பு படையெடுப்பு என்ற அர்த்த்தில் ஆங்கிலத்தில் வர்ணித்தமை புதிய கண்டனங்களை எழுப்பியுள்ளது.

இதனையடுத்து சுயெல்லா பதவியில் இருந்து விலகவேண்டுமென எதிர்க்கட்சிகள் கோரியுள்ளன. இந்த நிலையில் தற்போது முற்றாக சீர்குலைந்துள்ள அகதி தஞ்சம் கோருவதற்குரிய கட்டமைப்பை தான் சரிசெய்யப் உறுதியளித்துள்ள சுயெல்லா அதற்குரிய திட்டங்களை குறிப்பிடவில்லை.

கடந்த, ஞாயிறன்று டோவர் பகுதியில் குடியேறிகள் தங்கியிருந்த மையத்தில் நடத்தப்பட்ட எரிகுண்டு தாக்குதலையடுத்து அந்தப் பகுதியில் தங்க வைக்கப்பட்டிருந்த 700 பேரும் ஏற்கனவே இடநெருக்கடி நிலவும் மான்ஸ்ரன் மையத்துக்கு மாற்றப்பட்டுள்ளதையடுத்து புதிய நெருக்கடிகள் தோன்றியுள்ளன.

இந்த மான்ஸ்ரன் முகாமே தற்காலிக அடிப்படையில் 1,600 பேர் மட்டுமே தங்கும் வகையில் இந்த வருடத்தின் ஆரம்பத்தில் வடிவமைக்கப்பட்ட நிலையில், தற்போது அங்கு 4 700 பேருக்கு மேல் தங்க வைக்கப்பட்டுள்ளமை கண்டனங்களை உருவாக்கியுள்ளது.

இந்த, ஆண்டு மட்டும் டோவர் உட்பட்ட பிரித்தானியாவின் தென்கடற்கரை பகுதிகளுக்கு 40,000 பேர் வந்திறங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.