இம்ரான் கானை கொல்லவே வந்தேன் - துப்பாக்கி சூடு நடத்திய வாலிபரின் அதிர்ச்சி வாக்குமூலம்
பாகிஸ்தானில் முன்னாள் பிரதமரும், பிடிஐ கட்சி தலைவருமான இம்ரான் கான் இன்று பஞ்சாப் மாகாணத்தின் வசிராபாத்தில் அரசுக்கு எதிராக பேரணி நடத்தினார்.
திறந்த வாகனத்தில் ஆதரவாளர்களுடன் அவர் சென்றபோது ஒரு நபர் திடீரென அவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டார்.
இதில் இம்ரான் கானின் காலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் லாகூரில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
துப்பாக்கி சூடு நடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ 2007-ல் ஒரு பேரணியின் போது எப்படி படுகொலை செய்யப்பட்டார்? என்பதை இன்றைய தாக்குதல் நினைவுபடுத்தியது.
ஷெபாஸ் ஷெரீப் அரசாங்கத்திற்கு எதிரான நடந்த பேரணியின் மையப்பகுதியில் டிரக்கின் மீது இம்ரான் கான் நின்றபோது, கீழே இருந்து அந்த நபர் துப்பாக்கியால் சுடும்போது பதிவான வீடியோ வெளியாகி உள்ளது.
தாக்குதல் நடத்திய வாலிபர், யாரும் தன்னை தூண்டிவிடவில்லை என்றும், இம்ரான் கான் மக்களை தவறாக வழிநடத்துகிறார் என்ற கோபத்தில் அவரை கொல்ல விரும்பியதாகவும் கூறியுள்ளார்.
இதுதொடர்பான வீடியோவை பத்திரிகையாளர் ஒருவர் பகிர்ந்துள்ளார். தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தில் AK-47 துப்பாக்கியுடன் மற்றொரு நபர் இருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆனால் அது காவல்துறையால் உறுதி செய்யப்படவில்லை.